திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழநத்தம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி 38 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.மேலும், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், புதிய குடும்ப அட்டை திருத்தங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி கோட்டாட்சியர் பெற்றுக் கொண்டார்கள்.
மனுநீதி நாள் முகாம்
மனுநீதி நாளுக்கு முன்னதாகவே, வட்டாட்சியர் தலைமையில் முன்முகாம் நடத்தப்பட்டு, 132 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 53 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 79 மனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் அன்று கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனுக்களை நேரிடையாக வழங்குவதால், உடன் நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மனுநீதி நாள் முகாமிற்கு 10, 15 தினங்களுக்கு முன்னதாக நடைபெறும் முன் முகாமின்போது கோரிக்கை மனுக்களை வழங்கினால் அவைகள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுநீதி நாள் அன்று தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. முகாமில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரலிங்கம், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) சாந்திராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் (பொ) இளங்கோ, பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகத்தாய், ஆறுமுககனி, பாளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துசாமி, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.