தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      திருவண்ணாமலை
photo01

 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.

தீபத்திருவிழா

ஆன்மீக நகராம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று தொடங்கியது. விழாவையட்டி அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரரை மேளதாளம் முழங்க கோவிலிலிருந்து எடுத்து வந்து தங்க கொடி மரம் அருகே அமர வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஒத விடியற்காலை 5 மணிக்கு கார்த்தி குருக்கள் தலைமையில் 72 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.

இந்த விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, தூசி கே.மோகன் எம்எல்ஏ, கோவில் இணை ஆணையர் இரா.ஜெகநாதன், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கராஜன், மாவட்ட பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் ப.சுப்ரமணியன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நடிகர் மயில்சாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி.தனுசு, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், தாசில்தார் ஆர்.ரவி உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று பகலில் வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தனர்.

6ம் நாளான 28ந் தேதி பகலில் 63 நாயன்மார்களின் ஊர்வலமும் அன்றிரவு வெள்ளி ரத ஊர்வலமும் நடக்கிறது. விழாவின் 7ம் நாளான 29ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று விநாயகர், முருகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் மாடவீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இதில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 2ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணிதீபமும் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இவ்விழாவின் இந்தியா முழுவதிலுமிருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவையட்டி பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் செய்துவருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து