முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் ஆன்மா நம்பக்கம்தான் இருக்கிறது என்பது உண்மையாகியுள்ளது: முதல்வர் ஈ.பி.எஸ் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிக்கை

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் வெற்றிக்கனியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக செலுத்துவோம். இந்த வெற்றியால் அம்மாவின் ஆன்மா நம்பக்கம்தான் இருக்கிறது என்பது உண்மையாகி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

6 முறை ஆட்சி...

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 45 ஆண்டுகளை கடந்து தன்னிகரில்லா ஒரு மக்கள் இயக்கமாக வெற்றி நடைபோட்டு வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் அ.தி.மு.க கண்ட சோதனைகளும், வேதனைகளும் கணக்கிலடங்காது. அனைத்தையும் எதிர்கொண்டு, வெற்றிக்கண்ட சாதனை இயக்கம் நம் இயக்கமாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நம் அ.தி.மு.கவுக்கு ஏற்பட்ட சோதனை காலத்தில் ஜெயலலிதாவின் தலைமையிலான கழகம்தான் உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் அவர் கண்ட “இரட்டை இலை சின்னம்” ஜெயலலிதா தலைமையிலான கழகத்திற்கே உரிமை என்றும் அப்போதைய இந்திய தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்தது. அதன் பிறகு தொண்டர்களின் பலத்தோடும், மக்களின் பேராதரவோடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டை 6 முறை ஆட்சி செய்து, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடையச் செய்தார்கள்.

மீண்டும் நமக்கே...

ஒட்டு மொத்த தமிழகத்தையே கண்ணீரில் ஆழ்த்திவிட்டு நம்மை விட்டு பிரிந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய சோதனைகளை கழகத் தொண்டர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். தொண்டர்கள், தலைவர்கள் என்ற பாகுபாடில்லாமல் அம்மா என்கிற தாரக மந்திரத்தை மட்டுமே வேத வாக்காகக் கொண்டு நாம் அனைவரும் ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.கவை கட்டிக் காத்தோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நாம் காட்டிய விசுவாசத்தின் விளைவாகத்தான் இன்று இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் நமக்கே வழங்கியுள்ளது. இதன் மூலம் உண்மையான அ.தி.மு.க ஜெயலலிதா உண்மை விசுவாசிகளான நாம்தான் என்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

காணிக்கையாக ...

இந்தத் தீர்ப்பின் வெற்றிக்கனியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக செலுத்துவோம். ஜெயலலிதாவின் முதலாம் நினைவு நாள் நெருக்கத்தில் கிடைத்த இந்த வெற்றியால் அம்மாவின் ஆன்மா நம்பக்கம் தான் இருக்கிறது என்பது உண்மையாகி இருக்கிறது. இத்தகைய மகத்தான வெற்றிக்கு முழு முதற்காரணமாக இருந்த கழகத் தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் எங்கள் மனதார நன்றியையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற எம்.ஜி.ஆரின் வரிகளுக்கு இணங்க அம்மா வழியில் பணியாற்றுவோம். சாதனை படைப்போம்.

இவ்வாறு அவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து