முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா கைரேகை வழக்கு: பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைரேகையை ஆய்வு செய்வது தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்டு நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாகடர் பி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ‘ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும், அவருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரியும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆணையத்தின் படிவம்- ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அதை அரசு மருத்துவரான பாலாஜி சான்றொப்பம் செய்துள்ளார். இந்த படிவங்களில் ஜெயலலிதா சுய நினைவோடு தான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உரிய மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் ஜெயலலிதா கைரேகையின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என சரவணன் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு அரசு மருத்துவர் பாலாஜி இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதே போல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் முன்பும் டாக்டர் சரவணன் ஆஜராகி கைரேகை குறித்த சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தாமாக முன்வந்து உத்தரவு பிறப்பித்தார்.

அதில் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு பரப்பன அக்ரஹார சிறையில் கைதியாக அடைக்கப்பட்டபோது அவரது கைரேகையை பெறப்பட்டது அந்த கைரேகையை ஒப்பிட பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்ட் வரும் டிச.8 அன்று ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அதே போல் ஜெயலலிதா ஆதார் அட்டை பெற்றுள்ளாரா என்பது குறித்து ஆதார் ஆணைய தலைவரும் டிச.8 ஆஜராக உத்தரவிட்டு வழக்கை டி.8-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து