முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: அனுமதியின்றி நுழையும் வெளியூர் வாகனங்கள் பறிமுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்குள் உரிய அனுமதியின்றி நுழையும் வெளியூர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலையொட்டி 1,700 அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி புதுவண்ணாரப்பேட்டையில் நடந்தது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடிப்பது தொடர்பான கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்,

முதல்கட்ட பயிற்சியில் 200 பேர் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் 2 புதிய நடைமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தொகுதிக்குள் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் பாஸ் வழங்கப்படும். வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் தொகுதிக்குள் நுழைய, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ‘விவிபாட்’ இயந்திரத்தை தேர்தல் அதிகாரிகள் சிலர் முதல்முறையாகப் பயன்படுத்த உள்ளனர். அது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தங்கள் வாக்கை பதிவு செய்ததும், விவிபாட் இயந்திரத்தில் இருந்து வேட்பாளரின் பெயர், சின்னத்தோடு சிலிப் வரும். அது கண்ணாடிக்குள் இருக்கும் என்பதால், பார்க்க மட்டுமே முடியும். கையில் எடுக்கவோ, கொண்டு செல்லவோ முடியாது. தனியார் வாலெட் நிறுவனங்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து