முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு வாழ்வாதார தொகுப்பு உதவிதிட்டம் - முதல்வர் எடப்பாடி உத்தரவு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு வாழ்வாதார தொகுப்பு உதவிதிட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி வாழை, ரப்பர், கிராம்பு பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர், அந்த நிதியை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

“ஓகி புயல்” கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதற்கட்ட ஆய்வில், 3,623 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமாக தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.  குறிப்பாக, வாழை சுமார் 1,900 ஹெக்டேர் பரப்பிலும், ரப்பர் மரங்கள் சுமார் 1,400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளது. பயிர் சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்வதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 90 குழுக்கள் அமைக்கப்பட்டு, கணக்கீட்டுப் பணி என்னுடைய உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

வாழை பயிருக்கு சேத மதிப்பீடு 33 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், இடுபொருள் மானியமாக ஹெக்டேருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தற்போது 13,500 ரூபாய் தான் வழங்கப்படுகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில், மட்டி, செவ்வாழை, ரசகதலி, நேந்திரன் போன்ற வாழை ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. “ஓகி” புயலினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் வகையிலும், வாழை சாகுபடியை மீண்டும் தொடர்வதற்கும் சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். 

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில், புயல் பாதிப்புக்குள்ளாகி, மீண்டும் வாழை நடவு செய்ய விரும்பும் விவசாயிகளால் வாங்கப்படும் வாழைக் கன்றுகள், தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்ற இடுபொருட்களுக்கான செலவுத் தொகைக்காக, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் 13,500 ரூபாய்க்கு கூடுதலாக 40 சதவீத மானியமாக சாதாரண முறையில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.35,000/-மும், திசு வளர்ப்பு மூலம் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.50,000/-மும் மானியமாக வழங்கப்படும்.  இதில் முதலாண்டு சாதாரண முறை சாகுபடிக்கு ரூ.39,750/-ம், திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.51,000/-ம் வழங்கப்படும்.  ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் “ஓகி” புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500/- முதல் ரூ.63,500/- வரை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரம் ஒரு முக்கியமான பணப்பயிர் ஆகும்.  தற்போது 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000/- வீதம் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இடுபொருள் மானியமாக வழங்கப்படுகிறது.  ரப்பர் மரப் பயிரைப் பொறுத்தவரை, தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  இம்மாவட்டத்தில் ரப்பர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக அளவில் சிறு குறு விவசாயிகளாகவே உள்ளனர்.  பாதிப்பிற்குள்ளான ரப்பர் மர விவசாயிகள் புதிதாக நடவு செய்யவிருக்கும் ரப்பர் மரப் பயிர்களிலிருந்து வருமானம் கிடைப்பதற்கு ஏழு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கென ரப்பர் மர மறுசாகுபடிக்கென சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டத்தினை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.  இந்த தொகுப்பு உதவித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட ரப்பர் மரத் தோட்டங்களில் புதிதாக ரப்பர் மரம் பயிரிட விரும்பும் விவசாயிகள், ரப்பர் மர நடவு செய்து, ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்வதற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஆகும் முழு செலவான ரூ.50,000/-தையும் தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கும்.  அத்துடன், ரப்பர் மரத் தோட்டங்களில் தேனீ வளர்க்கும் போது, விவசாயிகளுக்கு கூடுதலாக கிடைக்கும் வருமானம் கூட “ஓகி” புயலால் பாதிப்பிற்குள்ளாகி பலன் கிடைக்காமல் போய்விட்டது என்ற கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வருமான இழப்பினை ஈடு செய்யும் வகையில் புதிய தேனீ வளர்ப்பு திட்டமும் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களை சிறுகுறு விவசாயிகள் வளர்த்து வருவதன் தனித்தன்மையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு சிறப்புத் திட்டமாக ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்பிற்கு, 1 ஹெக்டேர் பரப்புக்கு ஆகும் செலவான ரூ.32,000/- மதிப்பிலான 20 தேனீ பெட்டிகளுடன் கூடிய தேனீ குடும்பங்கள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் “ஓகி” புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,00,000/- நிதி உதவியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இது தவிர, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு முக்கிய பணப்பயிராக “நறுமணப் பயிர்களின் ராணி” எனப்படும் கிராம்பு சுமார் 750 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில்  சாகுபடி  செய்யப்படும்  கிராம்பு உலகத் தரம் வாய்ந்ததாகும். மேலும் கிராம்பு பயிர்களிலிருந்து பொருளாதார மகசூல் கிடைப்பதற்கு ஏழு வருடம் வரை ஆகிறது. “ஓகி” புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 43 ஹெக்டேர் கிராம்பு பாதிப்படைந்துள்ளது.

எனவே “ஓகி” புயலால் பாதிக்கப்பட்ட கிராம்பு விவசாயிகள் புதிதாக கிராம்பு நடவு செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் ஹெக்டேருக்கு ரூ.18,000/- இடுபொருள் மானிய உதவியுடன், கூடுதலாக ஹெக்டேருக்கு ரூ.10,000/- மானியமும் சேர்த்து மொத்தம் ஹெக்டேருக்கு ரூ.28,000/- வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இது தவிர, “ஓகி” புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 280 ஹெக்டேர் பரப்பில் மரவள்ளி, மிளகு, பலா உள்ளிட்ட பிற தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பயிர்களுக்கும் ‘ஓகி’ புயலினால் பாதிப்படைந்த இதர வேளாண் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரண நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

“ஓகி” புயலால் பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அறிவித்துள்ள சிறப்பு வாழ்வாதார தொகுப்பு உதவித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உதவிகளை உடனடியாக வழங்க அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் வழியில் வந்த தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்கள் மற்றும் மீனவர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.






இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து