தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்களில் தனி நபர் இல்ல கழிப்பறை, பசுமை வீடு திட்டம், சாலை பணிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      தஞ்சாவூர்
Thanjai 2017 12 12

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் தனி நபர் இல்ல கழிப்பறை, பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், சாலை பணிகள், குளங்கள் தூர் வாருதல் போன்ற வளர்;ச்சிப் பணிகள் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (12.12.2017) ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற 31.12.2017க்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 1,20,804 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அரசு மானிய உதவித் தொகை வழங்கி வருகிறது. இப்பணியை 20 நாட்களுக்குள் திட்டமிட்டு தனி நபர் இல்ல கழிப்பறையை கட்டி முடிக்க வேண்டும். தனி நபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கும் முதலமைச்சரின் பசுமை வீடு கட்டுவதற்கும், பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கும் வசதியாக நமது மாவட்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது.

மணல் காரணம் காட்டி காலம் தாழ்தாமல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், உதவி பொறியாளர்களும் பயனாளிகளை நேரில் சந்தித்து கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பசுமை வீட்டிற்கும் ரூ.2.10 இலட்சம் தமிழக அரசு வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் 877 வீடுகள் கட்டி முடிக்க வேண்டும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் 6252 வீடுகள் விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் சாலை பணிகள் தரமானதாகவும், விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளங்களில் தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். கரையின் இருபுறங்களிலும் பனை மரங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் போன்ற மரங்களை நட்டு வளர்ப்பதால் மண் அரிப்பு ஏற்படாமல் கரையை பாதுகாக்க முடியும். தனி நபர் இல்ல கழிப்பறை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொது மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து