முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்: ஆணையாளர் ரெ. சதீஷ் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      சேலம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளுவதற்கான துரித நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தனிக்குடிநீர் திட்டம் மூலம் தினசரி 103 மில்லியன் லிட்டர் மற்றும் நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினசரி 10 மில்லியன் லிட்டர் என மொத்தம் 113 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோக பணிகளை தொய்வின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக தொடர் கண்காணிப்பு பணிகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு , குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

விண்ணப்பிக்கலாம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நலன் கருதி புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மற்றும் வணிகம் சார்ந்த இடங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது கீழ்க்கண்ட தொலை பேசி எண்களில் (0427 – 2212844) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி (1800 – 425 – 6077) மூலமாகவோ அல்லது மாநகராட்சி மண்டல அலுவலர்களை நேரடியாகவோ அல்லது கீழ்க்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் சூரமங்கலம் மண்டலம் (1800 – 425 – 6011) அஸ்தம்பட்டி மண்டலம் (1800 – 425 – 6022) அம்மாபேட்டை மண்டலம் (1800 – 425 – 6033) கொண்டலாம்பட்டி மண்டலம் (1800 – 425 – 6044) பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு செலுத்த வேண்டிய தொகை குறித்த விவரங்களை அளிப்பார்கள். உரிய தொகை பெறப்பட்ட பின்னர் குடிநீர் இணைப்புகள் உடனடியாக வழங்குதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் முறையான குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மாறாக, அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளை பெறுவதற்கான எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. மேலும் சிறப்பு குழுக்களின் ஆய்வின் போது அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டால் உரிய வைப்புத் தொகை மற்றும் இதர கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் இணைப்புகள் முறைப்படுத்தப்படும். தவறும் பட்சத்தில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும். இனி வரும் காலங்களில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை வைத்திருப்போர் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து