முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

முன்னதாக குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை குறிப்பாக வாழை பயிரிடப்பட்டு சேதமடைந்த நிலப்பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடும் பாதிப்பு

கடந்த நவம்பர் 30-ம் தேதி ஒகி புயல் தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 3500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒகி புயலில் சிக்கி அடியோடு சாய்ந்தன. நூற்றுக்கனக்கான மரங்களும் வேரோடு சாய்ந்தன. வாழை, ரப்பர் மற்றும் கிராம்பு பயிரிடப்பட்ட நிலங்கள் பெரிதும் சேதத்திற்குள்ளாகின. இதனை தொடர்ந்து புயல் நிவாரண நடவடிக்கையில் தமிழக அரசு துரிதமாக இறங்கியது. பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்களையும் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

போர்க்கால...

இதையடுத்து பழுதாகிப்போன மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு சீரடைந்தன. மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்தும் சீர்செய்யப்பட்டன. ஒகி புயலால் கடலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் வேட்டை தொடரும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முன்னதாக புயலில் சிக்கி பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

முதல்வர் ஆறுதல்

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து அவர் புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் சென்றடைந்தார். அங்கு கல்படி ஏலா பகுதியில் வாழை பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அவர் பார்வையிட்டார். மேலும், பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூரில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது  அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எதிர்பாராதவிதமாக, துரதிர்ஷ்டவசமாக பேரிடர் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலிலே என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர்களை இழந்து வாடி துடிக்கின்ற குடும்பத்தாருக்கு என்னுடைய ஆறுதலையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

உடனடியாக உதவி

அரசைப் பொறுத்தவரைக்கும் புயல் அடித்த மறுகணமே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை  உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று ஆணையிட்டு, அவரும் திருச்சியிலிருந்து நேரடியாக அன்றைய தினமே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு எந்தெந்த விதத்திலே உதவி செய்யவேண்டுமோ அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரிடம் கோரிக்கை

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கரை சேரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, அப்படிப்பட்ட மீனவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உடனடியாக பிரதமரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. கரை திரும்புவதற்கும், அவர்களை காப்பாற்றுவதற்கும் தேவையான கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும்  அனுப்பிவைத்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தேன்.

அமைச்சர்களிடம்...

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சரிடத்திலும் இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடலுக்குச் சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்பதற்குண்டான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதேபோல, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடத்திலும் கோரிக்கை வைத்தோம். அவர்களும் 18 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலமாக தேடுதல் பணிகளை மேற்கொள்வதாக எங்களிடத்தில் தெரிவித்தார்கள்.

மூத்த அதிகாரிகள்

அதுமட்டுமல்ல, தலைமைச் செயலகத்தில் 2 முறை கடலோர காவல்படை, கப்பற்படை, விமானப்படை, அதிகாரிகளை அழைத்து மீனவர்களை தேடுகின்ற பணியை முடுக்கிவிட வேண்டும் விரைந்து செயல்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதை செய்வதாக எங்களிடத்திலே உறுதியளித்தார்கள். அதோடல்லாமல், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து, அதில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் அங்கேயே மாவட்ட ஆட்சித்தலைவர்களாக பணிபுரிந்தவர்கள், அந்த மாவட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்களை அனுப்பி அந்தப் பகுதிகளில் என்ன தேவையோ அதை மக்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கவேண்டுமென்று கூறி இருந்தேன். அதன்படி ஐஏஎஸ் அதிகாரிகளும் இங்கேயே தங்கி முகாமிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டார்கள்.

தொடரும் பணி ...

அதேபோல வேளாண்மைத்துறையின் முதன்மை செயலாளர்  இங்கேயே முகாமிட்டு விரைந்து செயல்படவேண்டும், கடலுக்குச் சென்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தேடுகின்ற பணிகளை வேகமாக, துரிதமாக முடுக்கிவிடவேண்டும் என்று ஆணையிட்டோம். அவர்களும் இங்கேயே தங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும், ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும், நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் தொடர்ந்து தேடுகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசி மீனவர் கிடைக்கின்ற வரை தேடுதல் பணி மேற்கொள்ளப்படுமென்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

தலையாய கடமை

எனக்கு முன்னாலே பேராயர் அவர்கள் பேசியது போல, உயிர் விலை மதிக்க முடியாதது, ஆகவே, எதை வேண்டுமானாலும் வாங்கலாம், உயிரை வாங்க முடியாது. எனவே விலை மதிக்க முடியாத உயிரை மீட்பது தான் எங்களது தலையாய கடமை. அதற்காக, அரசு முழுமூச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, இங்கே புயல் வருகின்றபொழுது மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இங்கே ஹெலிபேட் அமைத்தால் புயல் வருகின்ற காலங்களில் மீனவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இதை ஏற்கனவே மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கையாக வைத்திருக்கின்றோம்.

உயர்த்தி அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஹெலிபேட் அமைத்தால், புயல் அடிக்கின்றபொழுது மீனவர்களை உடனடியாக கரை சேர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், வீடுகளை இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அரசு தயாரைக இருக்கிறது. அதுமட்டுமல்ல, பசுமை வீடு திட்டத்தின் கீழ், தேவையான வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, அருகாமையில் இருக்கின்ற கேரள அரசு, மீன்பிடிக்கச் சென்று இறந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

வாழ்வாதார நிதி

இதேபோன்று அறிவிக்க வேண்டுமென்று சொன்னார்கள். அம்மாவினுடைய அரசு மக்களுடைய குறைகளை போக்குகின்ற அரசு. மக்களுக்கு எந்த நேரத்திலும் துன்பம் ஏற்பட்டாலும் அதை தீர்க்கின்ற அரசாக இருக்கின்ற காரணத்தினாலே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, புயலினால் மீன்பிடி தொழிலை செய்யமுடியாத நிலையை கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பத்திற்கும் வாழ்வாதார நிதியாக தலா ரூபாய் 2500 நிதி ஒதுக்குவதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதில் கிட்டத்தட்ட 31000 மீனவர் குடும்பங்கள் பயன்பெறுகின்றன.அதற்கு மேலும் 2500 ரூபாய் கூடுதலாக வழங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றம் இல்லை

புயலால் பாதிக்கப்பட்டு இறந்த மீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்பு தரவேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கை நியாயமானது என்பதால், அரசு இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்றவாறு தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுமென்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, காணாமல் போன மீனவர்களை தேடுகின்ற பணி முடுக்கிவிடப்பட்டு, இறுதிக்கட்டம் வரையிலும் தொடரும் என்பதைத் தெரிவித்திருந்தேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக சட்டபூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். உறுதியாக அதற்குரிய அரசாணையை வெளியிட்டு வருவாய் நிருவாக ஆணையர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளேன். இங்குள்ள மீனவர்களின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு இக்குழு தனது அறிக்கையை உடனடியாக கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

நிவாரணம் அளிக்க...

மேலும், காணாமல் போன மீனவர் குடும்பத்தினர் விரைந்து நிவாரண உதவிகள் பெற ஏதுவாக காத்திருக்கும் காலத்தை எவ்வளவு தளர்வு செய்ய இயலுமோ அவ்வளவு தளர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். ஆகவே, காணாமல் போன மீனவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிவாரணம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேடையிலே நீங்கள் என்ன கோரிக்கை வைத்தீர்களோ, அதில் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.

விவசாயிகளுக்கும்...

அதேபோல விவசாயிகள் இன்றைக்கு பயிரிட்டவைகளெல்லாம் புயலினால் சேதம் அடைந்திருக்கிறது, நெற்பயிரும் சேதம் அடைந்திருக்கிறது. அதற்கு தேவையான இழப்பீடு தொகையையும், அரசு வழங்க இருக்கிறது. வாழை மரங்கள் சேதம் அடைந்திருக்கிறது, அதற்குத் தேவையான நிவாரணமும் அரசு வழங்க இருக்கிறது. ரப்பர் மரங்கள் சேதடைந்திருக்கிறது, அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். அந்த இழப்பீட்டுத் தொகை நேற்றே (நேற்று முன்தினம்) நான் அறிவித்திருக்கின்றேன். நிவாரணத் தொகை புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கருவிகள்...

ஆகவே, புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக்  கொள்கிறேன். இங்கு அறிவிக்கப்பட்ட அனைத்தையும் அரசு விரைந்து செயல்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக வேகமாக, துரிதமாக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, மீனவர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கவேண்டும், அப்படி தகவல் கொடுத்தால் அவர்கள் உடனடியாக உயிருக்கு ஆபத்தின்றி கரை திரும்பிவிடுவார்கள் என்ற ஒரு கருத்தை சொன்னார்கள். ஆகவே,  அம்மாவினுடைய அரசு மீனவர்களுக்கு, தற்போது உலக வங்கி நிதியுடன் ரூபாய் 65 கோடி மதிப்பில், 300 அடி உயரமுள்ள கோபுரங்கள் அமைத்து 25டபுள்யூ வி.எச்.எஸ் கருவிகளும், 5டபுள்யூ வி.எச்.எஸ், 31.3.2018-க்குள் வழங்கப்படும்.

படகுகளுக்கும்...

அதேபோல, புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்ற ஒரு கருத்தையும் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. விரைந்து அந்த குழுக்கள், சேதமடைந்த அந்த படகுகளை பார்த்து, கணக்கிட்டு, சேதாரம் எவ்வளவு என்பதை அரசுக்கு தெரிவிக்கின்றபொழுது, சேதமடைந்த படகுகளுக்குண்டான நிவாரணத் தொகையும் அரசால் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே, நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அரசு விரைந்து செயல்படுத்தும்.  இவ்வாறு முதல்வர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து