முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் செல்ல தனி வழித்தடம் இருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் கிளை உத்தரவு

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு தனி வழித்தடம் இருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை இருபுறமும் மணல் லாரிகள் அதிகளவில் நிறுத்தி வைக்கப்படுவதால், சுங்கச்சாவடியைக் கடக்க பயணிகள் சிரமப்படுவதாக மேலூரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில்,

தமிழகத்தில் உள்ள எந்த சுங்கச்சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால ஊர்திகள் செல்ல தனி வழித்தடம் இல்லை. இதனால் விலைமதிக்க முடியாத உயிர்களின் இறப்புக்கு சுங்கச்சாவடிகளும் ஒரு காரணமாகி விடுகின்றன. ஒரு சுங்கச்சாவடியில் 5 வாகனங்கள்தான் நிற்க வேண்டும். 15 விநாடிகளுக்குள் அவை அங்கிருந்து செல்ல வேண்டும் என்கிற விதி எங்கும் கடைபிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுங்கச்சாவடிகள் மற்றும் சாலையின் தரத்தை ஆய்வு செய்து அவற்றை முறையாக பராமரிக்கும் பொறுப்பு நெடுஞ்சாலைத் துறையினரைத்தான் சாரும். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டிய வாகனங்கள் மற்றும் வசூலி்க்க தேவையில்லாத வாகனங்களுக்கு தனித்தனி வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும். ஒரு பொறுப்பு அதிகாரி அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நியமிக்கப்பட வேண்டும். அவர் தலைமையிலான ஊழியர்கள் போக்குவரத்தை சீரமைப்பது, சுங்க கட்டணம் வசூலிப்பது போன்றவற்றில் பொதுமக்களிடம் நண்பர்கள் போல செயல்பட வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆம்புலன்சுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தனி வழித்தடங்கள் குறித்து குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பாகவே வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகளின் அருகில் வாகனங்களை பார்க்கிங் செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளையும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தால் அதற்கு அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களுமே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து