முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொகாலி 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இரட்டை சதத்தால் இலங்கை அணி படுதோல்வி

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : இலங்கைக்கு எதிராக மொகாலியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன்

ரோகித் சர்மா இரட்டை சதத்தால் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியால், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடந்தது. இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகும். இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.

பந்துவீச்சு தேர்வு

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். அரைசதம் அடித்த தவான் 68 ரன்களில் சசித் பதிரானா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் - ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மாவும் அரைசதம் கடந்தார். தனது 2-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினார். மறு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ரோகித் ஷர்மா சதம் அடித்தார். இது சர்வதேச ஓருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 16-வது சதமாகும்.

டோனி 7 ரன்கள்

சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர் 88 ரன்களுல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மறு முனையில் ரோகித் ஷர்மா இலங்கை அணியினர் வீசிய பந்துகளை பவுண்டரியும், சிக்ஸருமாக அடித்து விளாசினார். ஷ்ரேயாஸ் அய்யரை தொடர்ந்து களமிறங்கிய டோனி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதன்பின் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். அவர் 151 பந்துகளில் இந்த இலக்கை எட்டினார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் இலங்கை அணிக்கு 393 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

இலங்கை படுதோல்வி

பின் களமிறங்கிய இலங்கை அணியின் பேட்டிங் தொடக்கத்திலேயே பரிதாபமாக இருந்தது. இலங்கையின் மேத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 111 ரன்கள் எடுத்தார். சாஹல் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 393 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 50 ஓவருக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்து உள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து