பெண்கள் மற்றும் குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      சிவகங்கை
14 karikudi news

காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, மகளிரியல் மையம் சார்பாக “பெண்கள் மற்றும் குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாத்தல்” -  என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்கில் உள்ள கருத்தரங்க அறையில்; நடைபெற்றது.
அழகப்பா பல்ககைலைக்கழக மகளிரியல் மைய இயக்குநர் பேராசிரியை கா.மணிமேகலை, வரவேற்;புரை வழங்கினார்.  அவர்தம் உரையில் அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் மையம் காவல்துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் உலக அளவில் 35 சதவிகிதம் பெண்கள் உடலளவிலும், மனதளவிலுமான பிரச்சினைகளை தங்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது மிகவும் தெரிந்தவர்களால் சந்திக்கின்றனர் என்றும் கூறினார். இந்தியாவில் 75 சதவிகிதம் கணவர் அல்லது உறவினர்கள் மூலமாகவே பிரச்சினைகள் உருவாகிறது என்றும் நான்கில் மூன்று குழந்தைகள் பல்வேறுவிதமான குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மகளிரியியல் மையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் பெண்களும், குழந்தைகளும் தமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.  எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் நடத்துவதன் மூலம் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண்கள் தங்களது வீட்டில் உள்ளவர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு  எதிரான குற்றங்கள் குறித்து பேசும் போது குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால் அவர்கள் பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்றும் இதுபற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார். பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அதனை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 5790 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் என்றும் அவர்களில் 75 சதவிகிதம் மாணவிகளே என்றும் இதற்கு காரணம் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுவதே என்றும் குறிப்பிட்டார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உடனடியாக கிடைக்கும் என்றார். பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் அவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி வாழ்வில் முன்னேறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காரைக்குடி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.பு.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.  அவர் தனது சிறப்புரையில் காரைக்குடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுவதுமாக முடிவிற்கு கொண்டுவருவதை காவல்துறை தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. பல்வேறு வகைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளது, இது பெண்ணின் கருவறை முதல் கல்லறை வரை தொடர்கிறது என்றும் கூறினார். சமூகவலைதளங்களின் மூலமாக பலவகையான குற்றங்களுக்குப் பெண்கள் உள்ளாக்கப் படுகின்றனர் என்றார்.  எனவே கல்விக் கூடங்கள் இது போன்ற கருத்தரங்குகள் மூலம் மாணவ, மாணவிகளின் மனநிலையினை பலப்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் காவல்துறையின் உதவியைப் பெறவும் இக்கருத்தரங்கு வழிவகை செய்யும் என்றும் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வுகான காவல்துறையின் உதவியைப் பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கருத்தரங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் காவல்துறையினரால் வினியோகிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.; மகளிரியல் மையத்தின் உதவி பேராசிரியை முனைவர்.ப.வீரமணி; நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து