முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டதைச் சொன்னான்

வெள்ளிக்கிழமை, 15 டிசம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

இலங்கையைத் தன் வாலால் சுட்டெரிந்த அனுமன் விரைவில் இலங்கை மாநகரை விட்டு நீங்குவதற்கு எண்ணினான். அருகிலிருந்த குன்று ஒன்றின் மேல் நின்றான். தனது தலைவனான இராமபிரானை மனத்தினால் தொழுதவாறே அங்கி ருந்து புறப்பட்டு வான்வழியே விரைந்து சென்றான்.

“கடல் கடந்து சென்ற அனுமன் இனிதாக மீண்டு வரவேண்டுமே!” என்ற கவலையாலும், “அனுமனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே” என்ற அச்சத்தாலும் வானர வீரர்கள் அனுமனின் வருகையை ஆவலுடன் நோக்கியிருந்தனர். அனுமன் வருகையைக் கண்டதும் அங்கதன் முதலானோர் தாய்ப் பறவையைக் கண்ட பறவைக் குஞ்சுகளைப் போலப் பெருமகிழ்ச்சி கொண்டார்கள்.

அனுமனின் தாள்களிலும், மார்பிலும், தோளிலும், கைகளிலும் பலவகை ஆயுதங்களால் உண்டாக்கப்பட்ட புண்கள் இருப்பதைக் கண்டு அங்கதன் முதலா னோர் பெரிதும் வருந்தினர். வாலியின் புதல்வனான அங்கதனை அனுமன் முதலில் வணங்கினான். பின்னர், கரடிகட்குத் தலைவனான சாம்பவானைச் சாஷ்டங்கமாக வணங்கினான். முறைப்படி மற்றவர்களுக்கும் வணக்கம் செலுத்தினான்.

“இங்கே இருக்கும் வானர வீரர்கட்கெல்லாம் மங்களமுண்டாக வேண்டும் என்று இராம பிரானின் பத்தினியாகிய சீதாபிராட்டியார் வாழ்த்துக் கூறி அனுப்பினார்” என்பதையும் அனுமன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். மகேந்திர மலையிலிருந்து சென்றது முதல் இலங்கை சென்று மீண்டது வரையில் விளக்கமாக எடுத்துச் சொல்லுமாறு வானர வீரர்கள் அனுமனை வேண்டிக்கொண்டனர்.

சீதாபிராட்டியின் கற்பொழுக்கத்தையும், பிராட்டியார் தந்த சூடாமணி என்னும் அடையாளத்தைத் தான் பெற்று வந்ததையும் அனுமன் விளக்கமாகச் சொன்னான். ‘இனி நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று வானர வீரர்கள் அனுமனை வினவினர். “இராமபிரான் இருப்பிடம் சார்ந்து, பிராட்டியின் நிலையைக் கூறி இராம பிரானின் துயரத்தைத் தீர்த்தலே நாம் செய்யத்தக்க செயல்!” என்று அனுமன் கூற, அனைவரும் விரைவில் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.

உச்சி வெயி லில் மதுவனத்தை அடைந்தார்கள். வானர சேனைகளின் பசி தீர மது அளிக்கு மாறு வானரத் தலைவர்கள் அங்கதனை வேண்டிக்கொண்டார்கள். அங்கதனும் அனுமதி அளித்தான். மதுவனத்தில் இருந்த தேனைத் தம் மனம் போல உண்ட வானரர்கள் மதுவின் மயக்கத்தினால் களியாட்டம் போட்டார்கள். மதுவனத்தை வானரர்கள் அழிப்பதைக் கண்ட சோலைக் காவலர்கள் தமது தலைவனான ததிமுகனிடம் இச்செய்தியைச் சொன்னார்கள்.

இரண்டு கோடி வானரங்களுடன் அச்சோலைத் தலைவனான ததிமுகன் மதுவனத்துக்கு வந்தான். சினத்துடன் ததிமுகன் வருதலைக் கண்ட வானர வீரர்கள் ஓடிப்போய் அங்கதன் அடிகளில் வீழ்ந்து வணங்கினர். அங்கதன்  ததிமுகனை அடித்துத் துரத்தினான். ததிமுக னுடன் வந்த வானரர்கள் குத்துண்டு தப்பித்துச் சென்றார்கள். பின்னர் அங்கதன் முதலானோர் இனிதே மதுவனத்தில் இளைப்பாறி வெயில் குறையும் சமயத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

சீதையைத் தேடுமாறு வானர வீரர்களை அனுப்பிய சுக்ரீவன் இராமனுக்குத் தேறுதல் கூறிக் கொண்டிருந்தான். சீதையை நினைக்கும் போதெல்லாம் சோகத்தால் இராமன் மூர்ச்சையானான். வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய முத்திசைகளிலும் சென்ற வானரர்கள் பிராட்டியைக் காணாது வறிதே திரும்பினர். ஆனால், தெற்கே சென்ற வானரர்கள் மட்டும் இன்னும் திரும்பவில்லை. எனவே, அனுமன் பிராட்டி யைக் கண்டு திரும்புதல் உறுதியென்பதில் இராமனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், இராமன் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவனானான். எனினும், இராமனுக்கு, ஓர் ஐயம் ஏற்பட்டது.

“ஒரு மாதத்துக்குள்ளாகவே சீதை யைத் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பி வரவேண்டும் என்ற தவணையோ சென்று விட்டது. ஆனால், தென்திசை நோக்கிச் சென்ற வீரரோ திரும்பவில்லை. அவ்வானர வீரர்கள் தவணை நாள் கடந்து விட்டதற்கஞ்சித் தம் முயிரைத் துறந்திருத்தல் கூடுமோ?” என்று இராமன் சுக்ரீவனிடம் கூறிக்கொண்டிருந்தான்.

இராமனும் சுக்ரீவனும் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில் இரத்தம் சொட்டச் சொட்டத் ததிமுகன் அங்கே வந்து சேர்ந்தான். மதுவனம் அழிவுற்ற செய்தியைச் சுக்ரீவனிடம் கூறினான். இது கேட்ட சுக்ரீவன் “இச்செயல் மகிழ்ச்சிக்கு அறிகுறியே!” என்று இராமனிடம் கூறினான். நடந்த முடிந்த செயல்களை விவரமாகத் ததிமுகன் சுக்ரீவனிடம் கூறினான். ததிமுகனுக்குச் சுக்ரீவன் ஆறுதல் மொழிகளைச் கூறியனுப்பி வைத்தான்.

தவணை நாட்கள் கழிந்து போனதை எண்ணிய வானர வீரர்கள் அனுமனை முதன்முதலாக விரைவில் செல்லுமாறு இராமனிடம் அனுப்பி வைத்தனர். அனுமனை இதுவரையிலும் காணாத இராமபிரான், “வானரர்கள் பிராட்டியை உயிருடன் பார்த்தோம் என்று கூறுவார்களோ? அல்லது இல்வுலகில் இல்லை, மேல் உலகத்தில் இருக்கக்கூடும்! என்று கூறுவார்களோ? யாதும் தெரியவில்லையே!” என்று சுக்ரீவனிடம் கூறி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.

இவ்வாறு இராமன் கூறிக் கொண்டிருக்கும் போது, அனுமன் தென்திசை யிலிருந்து வருவதை இராமபிரான் பார்த்துவிட்டான். அனுமனும் இராமபிரான் இருப் பிடம் வந்து சேர்ந்தான். வந்தவர் இராமபிரானை வணங்கவில்லை. தலைமேல் கூப்பிய கைகளையுடையவனாய்த் தென்திசை நோக்கித் தன் ஆறு அங்கங்களும் தரைமேல் படியுமாறு வீழ்ந்து வணங்கி வாழ்த்தினான். இதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட இராமபிரானின் உள்ளம் பெரிதும் உவகையடைந்தது. அவன் தோள்கள் பூரித்தன! கண்களிலிருந்து மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகியது. பிரிவுத் துன்பம் நீங்கிப்போயிற்று. சீதையிடம் கொண்ட அன்பு அதிகரித்தது.

பிராட்டியைத் தான் அசோகவனத்தில் கண்ட காட்சியை அனுமன் தன் அறிவு நலம் வெளிப்படுமாறு அற்புதமாகக் கூறலானான். ‘சீதையை’ என்று ஆரம்பித்தால் ‘சீதையைக் கண்டானோ? இல்லையோ?’ என்ற ஐயம் இராமனுக்கு ஏற்படும். ஆதலால் ‘சீதையை’ எனத் தொடங்காமல், ‘கண்டேன்’ என்றே தொடங்குகிறான். வால்மீகி இராமாயணத்திலும் “த்ருஷ்டாஸீதா” என்றே குறிக்கப்படுதலைக் காண்கிறோம். ‘கண்டேன்’ என்று மட்டும் கூறிவிட்டால், அனுமனால் காணப்பட்ட சீதை கற்புடன் இருக்கிறாளா? இல்லையா? என்ற ஐயம் தோன்றுதல் இயல்பே யன்றோ? எனவே ‘கற்பினுக் கணியை’ என்ற தொடரை அடுத்துப் பயன்படுத்து கிறான்.

இவ்வாறு, அனுமன் இராமபிரானின் உள்ளம் தெளிவடையும் வகையில் மிக அற்புதமாகச் சொற்களைப் பயன்படுத்தும் சொல்லாற்றலைக் காணும் போது, அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்பதை ஐயந்திரிபறத் தெரிந்து கொள்கின்றோமல்லவா? இன்னும் ஒரு மாத காலமே உயிரோடிருப்பேன்! அதற்குள் அவர் வந்து என்னை அழைத்துப் போக மனமில்லையென்றால் நான் உயிர் துறப்பேன்!” என்று தாங்கள் இருக்கும் திசை நோக்கித் தங்களுக்கு வணக்கம் செலுத்தி னார்கள். அதன் பின், அன்னையார் தம்முடைய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்து என்னிடத்தில் இனிதாகத் தந்தார். இதோ பாருங்கள் அந்தச் சூடாமணியை!” என்று கூறி அனுமன் சூடாமணியை இராமபிரானிடம் தந்தான்.

அப்போது, அங்கதன் முதலான படைத்தலைவர்கள் இராமபிரானையும் சுக்ரீவனையும் வணங்கி நின்றனர். தங்களில் செயல் வெற்றிபெற்றமையை எண்ணிப் பூரிப்புடன் நின்றார்கள். சுக்ரீவன் இராமபிரானை நோக்கி, “ஐயனே! பிராட்டியை நாம் எளிதாகக் கண்டு கொண்டோம்” என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறியதும் “சீதை இருக்குமிடம் தெரிந்தும், இன்னும் காலம் தாழ்த்துகின்றாயே!” என்று இராம பிரான் கூறினார்.

அவ்வளவில் படைகள் அனைத்தும் புறப்படுவதற்கான கட்டளை யினைச் சுக்ரீவன் பிறப்பித்தான். உடனே, கடல் போலச் சேனைகள் தென்திசை நோக்கிப் புறப்படலாயின.. அனுமன் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்ட வானரசேனைகள் பன்னிரண்டு தினங்களில் தென்திசையிலுள்ள கடலைக்கண்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து