கரூர் மாவட்ட ஊரக பகுதிகளில் 2017-2018 ஆம் ஆண்டில் 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன : செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      கரூர்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் காக்காவாடி ஊராட்சி அம்மையப்ப கவுண்டன்புதூரில் பசுமை போர்வை திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடுவு செய்து பராமரித்து வரும் பணியினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

செய்தியாளர் பயணம்

இது குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுவை தடுக்கவும், வெப்பத்தின் அளவை குறைக்கவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2017-2018 ஆம் ஆண்டிற்கு சாலையோரங்களில் 82கி.மீ நீளத்திற்கு 1500 மரக்கன்றுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 278.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பசுமை போர்வை திட்டத்தின்கீழ் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் ரூ. 121.00 இலட்சம் மதிப்பில் 1300 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 28000 மரக்கன்றுகள் ரூ.399.00 இலட்சம் மதிப்பில் நடவு செய்யும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், நிலத்தடி நீரை செறிவூட்டவும், மழை நீரை சேகரிக்கவும் , விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் கிராம ஊராட்சி பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொடர்பான பணிகள் ஆகிய சிறு பாசன குளங்களை மேம்பாடு செய்வதற்காக ரூ. 6 கோடியே 91 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 37 பணிகள் தொடங்கப்பட்டு அதில் 30 குளங்கள் அமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது. மீதமுள்ள 7 குளங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. என மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கவிதா, செயற்பொறியாளர் , சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், கனகராஜ், உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து