எழும்பூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்று குற்றவாளிகள் 2 பேர் கைது
சென்னை, எழும்பூர், பெருமாள் ரெட்டி தெரு, எண்.6 என்ற முகவரியில் வசித்து வரும் குமார், வ/32, த/பெ.கணேஷ் என்பவர் நேற்று காலை சுமார் 09.00 மணியளவில், புதுப்பேட்டை, வீரபத்திரன் தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் குமாரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2,500/-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். குமார் இது குறித்து, எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை
குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவ இடத்தில் விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.சசிகுமார் (எ) சசி (எ) புறா, 2. மூர்த்தி (எ) முஜிபுர் (எ) கவுஸ் பாஷா (எ) தமிழரசன், ஆகிய 2 பேரை மதியம் கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து ரூ.2,500/- மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய ஸ்பெலண்டர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சசிகுமார் மற்றும் மூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.