திருப்பதியில் சிபாரிசு மூலம் வழங்கப்படும் கூடுதல் லட்டு விலை உயர்வு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      ஆன்மிகம்
tirupathi laddu 2017 2 19

திருமலை, திருப்பதியில் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் கூடுதல் லட்டு விலையை இரு மடங்காக உயர்த்திட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்னர் லட்டு பிரசாதத்தை விரும்பி வாங்கி செல்கின்றனர். தர்ம தரிசன பக்தர்களுக்கு தற்போது மானிய விலையில் 2 லட்டு, கூடுதல் விலையில் 2 லட்டு என மொத்தம் 4 லட்டுகளும், திவ்ய தரிசன பக்தர்களுக்கு மானிய விலை லட்டு 2ம், கூடுதல் விலை லட்டு 2ம், இலவச லட்டு ஒன்றும் என மொத்தம் 5 லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ. 300 விரைவு தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு இலவச லட்டு 2, கூடுதல் லட்டு 2 என மொத்தம் 4 லட்டுகளை தேவஸ்தானம் விநியோகித்து வருகிறது.

வி.ஐ.பி.க்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பரிந்துரை கடிதங்கள் மூலம் தினந்தோறும் லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாதாரண பக்தர்கள் இதனை பெற முடியாது. லட்டு தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் கூடுதல் லட்டு விலையை தேவஸ்தானம் இருமடங்காக நேற்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி சாதாரண லட்டு ரூ. 25ல் இருந்து ரூ. 50 ஆகவும், கல்யாண உற்சவ லட்டின் விலை ரூ. 200 ஆகவும், வடை விலை ரூ. 100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. சிறிய லட்டு செய்ய ரூ. 37ம், பெரிய லட்டு ரூ. 150ம், வடை தயார் செய்ய 80 ரூபாயும் செலவாகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தற்போது தினந்தோறும் லட்டு மடப்பள்ளியில் 2.80 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இதனை 5 லட்சமாக உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை தனியார் பேக்கரி நிறுவனத்துக்கு சென்று தேவஸ்தான அதிகாரிகள் குழு பார்வையிட்டு வந்தது. இதையடுத்து லட்டு மடப்பள்ளி அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து