முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாற்று நடவு மூலம் கரும்பு சாகுபடி

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

கரும்பு பயிர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது.  விவசாயிகளுக்கு லாபகரமானதும், அதிக பிரச்சினை இல்லாததுமான பயிராக கரும்பு விளங்குகிறது.  கரும்பின் முக்கிய விளை பொருளான சக்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.  சர்க்கரை நுகர்வில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில்  உள்ளது.  இங்கு ஆண்டுக்கு 2.5 கோடி டன்கள் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.
 இந்தியாவின் சராசரி கரும்பு மகசூல் ஏக்கருக்கு 28 டன்களாக உள்ளது.  ஆனால் தமிழகத்தில் கடந்த 2015-16ல் - 41 டன்களாக இருந்தது. இந்திய அளவில் தமிழகம் மகசூல் திறனில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் சராசரி மகசூல் 50 டன்களாக உள்ளது.
 எனவே, அத்தியாவசிய உணவுப் பொருளாக சர்க்கரை இருப்பதால் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  கரும்பு உற்பத்தி திறனில் முந்தைய ஆண்டுகளில் தமிழகம் உலகிலேயே முதலிடம் வகித்தாலும், கடந்த பல ஆண்டுகளாக உற்பத்தி திறனில் எக்டருக்கு போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.  கரும்பின் அதிகபட்ச உற்பத்தித் திறன் ஏக்கருக்கு 132 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  எனவே, சராசரி மகசூல் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரும்பில் புதிய இரகங்கள் அறிமுகம்,  அதிக இடைவெளியில் நடவு,  சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதில் நவீன உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் செம்மைகரும்பு சாகுபடி எனப்படும் ஒரு விதைப் பருசீவல் நாற்று முறையாகும்.  இது நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்றும் கூறப்படுகிறது.

நீடித்த நவீன கரும்பு சாகுபடி (ளுளுஐ) ஃ கரும்பு நாற்று நடவு முறை
வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் இருபருக்கரும்பு கரணைகளை நடுகிறார்கள்.  இதிலிருந்து 60 ஆயிரம் கரும்பு பயிர்கள் தோன்றி,  ஒரு கணுவுக்கு 2 கரும்புகள் விளைந்து அதில் ஒரு கரும்பு ஒரு கிலோ எடை எனக் கணக்கிட்டால் ஏக்கருக்கு 120 டன் கரும்பு மகசூல் கிடைக்க வேண்டும்.  ஆனால் நடைமுறையில் இதில் 3-ல் ஒரு பங்கு மகசூல் தான் கிடைக்கிறது.  அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், போதிய பயிர் எண்ணிக்கை இல்லாததுதான் முக்கிய குறைபாடாகக் கருதப்படுகிறது.  இந்த நவீன கரும்பு நாற்று முறை மூலம் இந்த குறைபாடு தவிர்க்கப்படுகிறது.
இம்முறையின் மூலம் விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு நாற்றங்கால் அமைத்து ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி மேட்டூர், கொளத்தூர் போன்ற இடங்களுக்கு லட்சக் கணக்கில் கரும்பு நாற்று விநியோகம் செய்து வரும் கோபி வட்டாரம் பா.வெள்ளாளபாளையம் - குளவிக்கரடு பகுதியைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்ற முன்னோடி விவசாயி இது குறித்துத் தெரிவித்ததாவது
நான் பல ஆண்டுகளாக கரும்பு கரணையிலிருந்து நாற்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றங்காலை அமைத்து, கரும்பு நாற்றுக்களை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறேன்.  ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் நாற்றுக்களை உற்பத்தி செய்கிறேன்.  நிழல் வலைக் கூடம் அமைத்து நன்கு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டுதான் இந்த நாற்றுக்களை உற்பத்தி செய்ய முடியும்.  ஒரு நாற்றுக்கு 1.60 ரூபாய் வசூலிக்கிறேன்.  இது தவிர போக்குவரத்து  செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்.  கரணையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் எண்ணிக்கை வேண்டும்.  ஆனால் இந்த முறையில் 5 முதல் 6 ஆயிரம் நாற்றுகள் போதுமானது.  பார்களில் 5 அடி இடைவெளி தேவை. 
இந்த முறையில் கரும்பு கரணையில் உள்ள பருக்கள் வெட்டுக் கருவி மூலம் அப்படியே சீவி எடுக்கப்பட்டு, தேங்காய் நார்க்கழிவுகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் ஊன்றப்பட்டு, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது.  25 முதல் 30 நாட்கள் ஆனதும் 4 முதல் 6 இலைகள் வளர்ந்திருக்கும்.  சாதாரணமுறையில் 2 மாதங்களில் கிடைக்கும் வளர்ச்சி - இந்த முறையில் ஒரே மாதத்தில் கிடைத்துவிடுகிறது.  இந்த நிலையில் நன்கு வளர்ந்துள்ள பயிர்களை எடுத்து நடவு செய்து விடலாம்.  இதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக அளவு முளைப்புதிறன் கிடைக்கிறது.  இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 100 டன்கள் வரை மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது” - என்று கூறினார்.

இந்தப் புதிய முறை நாற்று உற்பத்தி குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்ததாவது, ‘ ஒரு பரு கரும்பு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து, நாற்றுக்களைப் பாதுகாப்பாக வளர்த்து, நடவு செய்யும் இம்முறை கரும்பு உற்பத்தியில் பெரும் புரட்சியை உருவாக்கியுள்ளது.  சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் விதைப் பருக்கள் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இந்தப்புதிய முறையில் 5 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே நடவு செய்யப்படுகிறது.  அதிக இடைவெளியில் நடப்படுவதால் காற்றும், சூரிய ஒளியும் பயிர்களுக்கு இடையில் நன்கு ஊடுருவுகிறது. ஒருபார் விட்டு ஒரு பார் நீர் பாய்ச்சுதல் மற்றும் சொட்டுநீர்ப்பாசனம் போன்ற உத்திகளை இதில் பயன்படுத்துவதால் 40 சதம் பாசன நீர் சேமிக்கப்படுகிறது.  பார்களின் இடைவெளியில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், களைகளையும் கட்டுப்படுத்தலாம்.  ஒரு ஏக்கருக்கு விதைக் கரணைகள் 4 டன்களுக்குப் பதிலாக, இந்தப் புதிய முறையில் விதை சீவல்களின் எடை வெறும் 50 கிலோ என்பதால் விதைக் கரணைகளுக்கான போக்குவரத்து செலவும் பிற நடைமுறைகளும் வெகுவாகக் குறைகிறது.  ஒரு பயிரிலிருந்து 15 முதல் 20 கிளைப்புகள் தோன்றுவதால் மகசூல் இரட்டிப்பாக வாய்ப்பு ஏற்படுகிறது.   நடப்பு மார்கழி தைப்பட்டத்திற்கு கோ 86032, கோ 99004, கோ 94008, கோகு 94077 ஆகிய இரகங்களை சாகுபடி செய்யலாம்.  இதில் கோ 86032 இரகம் சிறந்ததாக கருதப்படுகிறது.  தமிழக மொத்த கரும்பு சாகுபடிப் பரப்பில் 79 சதம் பரப்பளவில் இந்த கோ 86032 இரகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ஒரு பரு சீவல் நாற்றுக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிழல் வலைக் கூடங்கள் அமைக்கவும் பருவெட்டும் கருவி உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் 50 சத மானியமாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.  ஒரு பரு கரும்பு நாற்றுகள் நடுவதற்கு ஏக்கருக்கு 4500 ரூபாய் மானியமும், இந்த வயல்களில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் அமைப்பதற்கு சிறு விவசாயிகளுக்கு அதிக பட்சம் 2 லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.  இது குறித்து மேலும் விவரங்களை அறிய கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.” - என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து