பதிவாளர் அலுவலகங்களில் நிலுவையில் உள்ள ஆவணங்களை பெற சமாதான் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தமிழகம்
Tamil Nadu 2017-12 31

Source: provided

சென்னை :  முத்திரைக் கட்டண வித்தியாசத்தால், பதிவாளர் அலுவலங்களில் நிலுவையில் உள்ள ஆவணங்களை பெறுவதற்கு சலுகை கட்டணத்துடன் சமாதான் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய முத்திரை சட்டப்படி ஒரு நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, முத்திரை தீர்வை வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நிலத்தின் மதிப்பு குறைவாக காட்டப்படும் பட்சத்தில், பதிவாளர் அலுவலகங்களில் அந்த ஆவணம் பதிவு செய்யப்பட்ட பிறகு களஆய்வு, விசாரணைக்காக பரிந்துரைக்கப்படும்.

அவ்வாறு கள ஆய்வு, விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை), தனித் துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாக பதிவுத் துறை கண்டறிந்துள்ளது.


இந்த ஆவணங்கள் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய் பல கோடி முடங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளை தீர்க்கவும், முடங்கியுள்ள வருவாயை பெறவும் ‘சமாதான் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் சார்பதிவாளரால் பரிந்துரைக்கப்பட்ட மதிப்புக்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வையில், ஏற்கெனவே செலுத்தியது போக, மீதமுள்ள தொகையில் 3-ல் 2 பங்கு மட்டும் செலுத்தி ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம், 2018 ஜனவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை என 3 மாதங்களுக்கு மட்டும் நிலுவையில் இருக்கும். எக்காரணம் கொண்டும் இக்காலக்கெடு நீட்டிக்கப்படாது. இதன்மூலம், மதிப்பு நிர்ணயத்துக்கான மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் ஆகியோரின் கள ஆய்வு, விசாரணை போன்ற நடைமுறைகளும் தவிர்க்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து