அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை: ராணுவத்தில் மீண்டும் திருநங்கைகள் சேர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      உலகம்
trump 2017 12 31

வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர தடை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஜனவரி 1-ம் தேதி முதல் ராணுவத்தில் மீண்டும் திருநங்கைகள் சேர்க்கப்பட உள்ளனர்.

திருநங்கைகளை அமெரிக்க ராணுவப் பணியில் சேர்க்கக்கூடாது என்று கடந்த ஜூலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 4 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், அதிபரின் உத்தரவுக்கு தடை விதித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதித்துறை வட்டாரங்கள் கூறும்போது, “நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1 முதல் திருநங்கைகள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். அதற்கான பணிகளை பாதுகாப்புத் துறை அமைச்சகம் எடுக்கும்” என்று தெரிவித்தன.


திருநங்கைகள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெனீபர் லெவி கூறும்போது, “நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யாது என்ற செய்தி மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியதாகும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து