முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் டேங்கர்களுக்கு மண்டல வாரியாக ஒப்பந்தம் அறிவிக்க வேண்டும்: தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      நாமக்கல்

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் செயல்பட்டு வருகிறது.

 கோரிக்கை

இதன் உறுப்பினர்களுக்கு சொந்தமான 4,500 புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள், இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றது. இவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் கேஸ் மொத்தமாக புல்லட் டேங்கர்களில் எடுத்துச்சென்று நாடு முழுவதும் உள்ள கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பாட்டிலிங் மையங்களில் சேர்க்கின்றன.

இதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு, மண்டல வாரியான ஒப்பந்தம் மூலம், வாடகைக்கான விலைப்புள்ளியை நிர்ணயம் செய்து வழங்கி வருகின்றன. இந்தமுறை, அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2017 முதல் 2022 வரை ஒப்பந்தத்தை, ஆயில் நிறுவனங்கள் கடந்த, ஜூன் மாதம் அறிவித்தது. பின்னர் அந்த ஒப்பந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாரத பிரதமரின் அனைவருக்கும் காஸ் இணைப்பு திட்டம்மூலம், அதிகளவில் கேஸ் லாரிகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்பில், நாமக்கல் பகுதியில், புதிதாக நடப்பு ஆண்டு சுமார் 3,000 புல்லட் லாரிகள் வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

ஒப்பந்தம்
ஏற்கனவே இருந்த ஒப்பந்த காலம் கடந்த அக்டோபர் 31ல் முடிந்துள்ள நிலையில், புதிய ஒப்பந்தத்தை விரைவில் அறிவிக்க வேண்டும்என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் கேஸ் டேங்கர் உரிமையாளர் சங்கத்தினர், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால், மண்டல வாரியாக அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தம், இனி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே அறிவிக்கப்படும். வாடகை ஒப்பந்தத்தில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த டேங்கர் லாரிகள் சம்மந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள முடியும்என, அமைச்சர் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் அறிவிப்பால், நாமக்கல் பகுதியில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இந்நிலையில், மாநில அளவில் ஒப்பந்தம் நடைபெற்றால் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான ரீபைனரி உள்ளது. இந்த ஒரு ரீபைனரியில் இருந்து சுமார் 1000 லாரிகள் மட்டுமே இயக்க முடியும். வேறு மாநிலங்களில் உள்ள நீபைனரிகளில் ஒப்பந்தம் கிடைக்காவிட்டால் மீதமுள்ள சுமார் 6000 லாரிகள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். இதன் மூலம் புதிய வண்டிகள் வாங்குவதற்காக வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள கடன் தொகை ரூ.1000 கோடி அளவிற்கு வாராக்கடனாக மாறும் நிலை ஏற்படும். டேங்கர் லாரித் தொழில் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

 தீர்மானம்

இந்நிலையில் இது குறித்து, சதர்ன் ரீஜன் எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். கூட்டத்தில், நாமக்கல் பகுதியில் உள்ளவர்கள், கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக லாரித்தொழிலை இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். இந்நிலையில் காஸ் டேங்கர் லாரிகளை, குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என, மத்திய பெட்ரொலியத்துறை அமைச்சர் கூறுவது, தேசிய இறையான்மைக்கு எதிரானது. மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும், மாநில அளவிலான ஒப்பந்த முறை என்பதை மாற்றி, ஏற்கனவே உள்ள மண்டல வாரியான ஒப்பந்தத்தை விரைவில் அறிவிக்க வேண்டும். மேலும் இப்பிரச்னையில் வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டல லாரி உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சுதர்ன் ரீஜன் எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள், சங்க செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணபதி, உபதலைவர் தங்கவேல், துணைத்தலைவர் செந்தில்குமார், இணைசெயலாளர் கணேசன், துணைசெயலாளர் மாதேஸ்வரன் உட்பட ஏறாளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து