தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு: வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தமிழகம்
Meteorological Centre 2017 04 03

சென்னை, தமிழகத்தில் கடந்த ஆண்டு இயல்பான அளவை காட்டிலும் 9 சதவீதம் குறைவாக வட கிழக்கு பருவமழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். ஆண்டு மழைப்பொழிவில் 48 சதவீதம் மழையை இந்த காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழை அளவை பெறும். 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தை வஞ்சித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் வறட்சி பாதையை நோக்கி சென்றது. தண்ணீர் பஞ்சத்தால் பல பகுதிகள் வறண்டு போயின.

இந்த வறட்சிக்கு ஒரு விடிவுகாலமாக தென்மேற்கு பருவமழை காலம் அமைந்தது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்துக்கு நன்றாக இருந்தது என்றே சொல்லலாம். 32 செ.மீ. மழையை பெறும் இந்த காலத்தில் 41 செ.மீ. மழை பதிவானது. இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம். காய்ந்து கிடந்த தமிழகத்துக்கு தென்மேற்கு பருவமழை ஆறுதலாக அமைந்தது. 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏமாற்றத்தை சந்தித்த தமிழகம், கடந்த ஆண்டு 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை மழையை பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.


அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெருமளவு மழையை கொடுக்காவிட்டாலும், ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. நவம்பர் மாதம் 30-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மொத்தமாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு மாதமும் முறையே 18 செ.மீ., 17 செ.மீ., 9 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஓரளவு மழை பெய்தாலும், டிசம்பர் மாதத்தில் 4-ந்தேதிக்கு பிறகு மழையே இல்லை. அந்த வகையில் 2017-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 9 சதவீதம் குறைவாகவே பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, 89 சதவீதம் முதல் 110 சதவீதத்துக்குள் தான் மழை பெய்து இருக்கிறது. வழக்கம்போல இந்த முறை வடகிழக்கு பருவமழை காலமும் நமக்கு ஏமாற்றத்தையே தந்து இருக்கிறது. என்றாலும், பெரும்பாலான ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருக்கின்றது. நிலத்தடி நீரும் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சியை தந்தாலும், விவசாயிகளுக்கு இது பெரும் ஏமாற்றம்தான்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து