முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்முகா நதி- அமராவதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: முதல்வர் இ.பி.எஸ் உத்தரவு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேனி மாவட்டம் சண்முகா நதி, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை ஆகியவற்றில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த் தேக்கத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 3.ம்தேதி முதல் 94 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த இராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்களில் உள்ள 1,640 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக் கோரி, அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 29,387 ஏக்கர் பழைய பாசன பகுதிகளுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் புதிய பாசன பகுதிகளுக்கும் 3.1.2018 முதல் 31.1.2018 முடிய, தகுந்த இடைவெளி விட்டு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து