கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: ஆங்கிலப் புத்தாண்டை உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடிய மக்கள்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தமிழகம்
people celebrate new year 2018 1 1

சென்னை : 2018 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் மக்கள் கோலகலமாக கொண்டாடினர். இதே போல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர்.

2017ம் ஆண்டு முடிவுற்று 2018ம் ஆண்டு பிறந்துள்ளது. இதை தமிழகம் முழுவதும் மக்கள் நேற்று கொண்டாடினர். சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

மெரீனா கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே மக்கள் திரளாக கூடத்தொடங்கினர். ஏராளமானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். நேரம் செல்ல, செல்ல மெரினாவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டது.கடற்கரையில் காந்தி சிலை முன்புள்ள மணிக்கூண்டு அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கூட்டாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்தனர். கண்கவர் வாண வேடிக்கையும் நடைபெற்றது. பலூன்களை பறக்க விட்டு ஆட்டம்,– பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி கட்டித் தழுவிக் கொண்டனர். இனிப்புகளை பரிமாறி கொண்டனர். பலர் கேக்குகளை கொண்டு வந்து வெட்டி அங்கு கூடியிருந்தவர்களுக்கு வழங்கினார்கள். எலியட்ஸ் மற்றும் மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு மெரீனா காந்தி சிலை அருகே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விசுவநாதன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். போலீஸ் கமிஷனர் விசுவநாதன் தலைமையில் இணை– துணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர். மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க, ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க பட்டது. இரவு ரோந்து பணியில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கியமான சாலை சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனர். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது, அதிவேகமாக ஓட்டிச் செல்லக் கூடாது என்றும் போலீசார் எச்சரித்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் கார், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சாலையில் செல்வோரிடம் புத்தாண்டு வாழ்த்துகளை கூறிச் சென்றனர்.புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தீனம்இரவு முதல் 2017ம் ஆண்டிற்கான நன்றி அறிவிப்பு பிரார்த்தனையும், சரியாக 12.01 மணிக்கு 2018ம் ஆண்டு புத்தாண்டு பிரார்த்தனையும் நடந்தது. கடந்த ஆண்டுக்காக நன்றி தெரிவித்தும், புத்தாண்டில் பல ஆசிகள் வழங்க வேண்டியும் பாதிரியார்கள் பிரார்த்தனை செய்தனர். சாந்தோம் தேவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி குழந்தைகளுடன் கேக் வெட்டினார். சி.எஸ்.ஐ. கதீட்ரல் பேராலயம், பரங்கிமலை புனித தோமையர் பேராலயம், பேட்ரிக் ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், கன்டோன்மண்ட் ஹாரிசன் ஆலயம் உள்ளிட்ட சென்னை நகரின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த பிரார்த்தனைகளில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த புத்தாண்டு மன அமைதியையும், வளமும் தரும் ஆண்டாக அமைய வேண்டும். மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தர வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கு அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதே போல் பெரும்பாலான கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 12 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுவையிலும் கொண்டாட்டம்

புதுவையில் மணக்குள விநாயக் ஆலயத்தில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டனர். சாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு வைரக்கிரீடம் சூட்டப்பட்டது. ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

புதுவை அங்காளம்மன் கோயில் , வரதராஜப்பெருமாள், வேதபுரீசுவரர், கவுசிக பாலசுப்பிரமணியர், சித்தானந்தா கோவில் , வீராம் பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், கதிர்காமம் கதிர்வேல் சாமிகள் பஞ்சவடி ஆஞ்சநேயர் திருவக்கரை வெக்காளியம்மன், மயிலம் முருகர், இரும்பை மாகாளீசுவரர், கைலாசநாதர்,அப்பா பைத்தியம் சாமி கோவில்களில் நேற்று புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ,சிறப்பு அர்ச்சனைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். புதுவையில் புத்தாண்டை யொட்டி கடற்கரையில் கொண்டாடினார்கள். அனைத்து ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தினர்.

உலகம் முழுவதும்....

இதே போல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்றனர். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளில் மக்கள் வானவேடிக்கைகளை நிகழ்த்தி 2018ம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். பட்டாசு சத்தம் காதை பிளக்கும் அளவிற்கு உலக மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். மக்கள் ஆடிப்பாடி இந்த புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கேக் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து