முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
SUPREMECOURT 2017 10 30

புதுடெல்லி: முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய பிறகு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் இது சட்டமாகி விடும்.

இந்நிலையில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினரான ஜபர்யாப் ஜிலானி கூறுகையில், “இந்த மசோதாவை, இந்திய முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளனர். எந்தவொரு தவறான சட்டத்துக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இதன்படி வழக்குத் தொடர எங்கள் வாரியத்தின் சட்டப்பிரிவும் பரிந்துரைத்துள்ளது. எனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்றார்.


இதுகுறித்து போராட்டக் குழுவின் இணை நிறுவனரான ஜக்கியா சோமன் கூறும்போது, “குற்றம் சாட்டப்படும் ஆண்களிடம் விசாரணைக்காக நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். மேலும் ஆண்களுக்கு ஜாமீனில் விடுதலையாகும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தில் மேலும் சில வழிமுறைகள் மாற்றப்பட வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து