முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிய உணவு திட்டத்துடன் இனி பாலும் வழங்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்கும் விதமாக மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை அளித்துள்ளது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் இலவச மதிய உணவுத் திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ஏழை மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வி, கற்கவும், பசி இல்லாமல் கல்வியறிவு பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மதிய உணவுத் திட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு வாரம் இரு முறை சத்துணவில் முட்டை, காய்கறிகள், சுண்டல் மற்றும் கலவை சாதங்கள் என்று ஒரு பட்டியலையே ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இந்நிலையில் நாடு முழுவதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், குழந்தைகள் நல அமைச்சகம் ஆய்வு நடத்தியது. இதில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

பால் வழங்க கடிதம்

இதன் அடிப்படையில் மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்கப்படும் மாநிலங்களில் மாணவர்களுக்கு பாலும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சத்துணவோடு பால்

சத்துணவுடன் பாலையும் சேர்த்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாநிலங்களை மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டமே சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து