அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய சீனா !

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      உலகம்
trump1

மாஸ்கோ, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை பாகிஸ்தான் வழங்கிவருவதாக டிரம்ப் குற்றம் சாட்டியதை அடுத்து, சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு பிரதிபலனாக, பொய்களையும், வஞ்சகங்களையுமே அமெரிக்காவுக்கு அந்நாடு திரும்ப வழங்கியுள்ளது. அமெரிக்க தலைவர்களை முட்டாள்கள் என்று பாகிஸ்தான் எண்ணிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தையும் அந்நாடு வழங்கி வருகிறது" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுயாங், ''பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மகத்தான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அந்நாடு ஏராளமானவற்றைத் தியாகம் செய்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் உலகத்துக்கே சிறந்த பங்களிப்பை அளித்துள்ளது. இதைச் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானைக் கண்டித்து வருகிறார். தங்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்காவிட்டால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் அண்மையில் கடுமையாக எச்சரித்திருந்தார்.

அதேபோல, மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீது விடுதலை செய்யப்பட்டபோதும் பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை டிரம்ப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்திலும் பாக். ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து