மத்திய அரசின் புதிய மசோதாவை கண்டித்து மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் - பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      தமிழகம்
PARLIAMENT

சென்னை : மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017-க்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதிய மசோதா...

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ கல்வி தொடர்பான முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி நட்டா தாக்கல் செய்துள்ள இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
யுனானி, ஹோமியோபதி, சித்தா போன்ற மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்களை 'பிரிட்ஜ்' எனும் குறுகிய கால படிப்பு மூலம் அலோபதி மருத்துவர்களாக அங்கீகரிப்பது, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு அதற்கு பதிலாக புதிதாக 4 நிர்வாக குழுக்களை அமைப்பது, தனியார் மருத்துவ கல்லூரிகளை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதிப்பது போன்ற அம்சங்கள் இந்த மசோதாவில் அடங்கி உள்ளன.

கடும் எதிர்ப்பு...

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ ஆணையம் அமைக்கும் புதிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தனியார் மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை தவிர டி.பி. நோயாளிகளுக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட வில்லை. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டன.

கருப்பு பேட்ஜ் அணிந்து...

தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்களும், 60 ஆயிரம் டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவமனைகளில் கூட நேற்று புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் அந்த பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2.9 லட்சம் டாக்டர்கள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, ராயப் பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஒருமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் 2.9 லட்சம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்  என்ற எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்  அதனை அனுப்பிவைத்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க எதிர்ப்பு

முன்னதாக மக்களவையில் நேற்று மருத்துவ ஆணைய மசோதா அறிமுகமான பிறகு, நடந்த விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்று மக்களவையில் பேசினர். அப்போது, பொள்ளாச்சி தொகுதியின் அ.தி.மு.க உறுப்பினர் சி.மகேந்திரன் குறுக்கிட்டுப் பேசினார். மருத்துவ ஆணைய மசோதா குறித்து மகேந்திரன் பேசியதாவது:

''மருத்துவ ஆணைய மசோதா 201-ல் பல குறைபாடுகள் உள்ளன. இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் இந்த மசோதாவில் அதன் உறுப்பினர்களாக மருத்துவர் அல்லாதவரை அமர்த்த பரிந்துரைக்கிறது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் மாநிலங்கள் சார்பிலான உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும். எனவே, இந்த மசோதாவை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். இதன்மூலம், மாநில அரசுகளின் உரிமைகளில் அனாவசியமான தலையீடுகள் எழுவதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

போலிகளை...

இந்த மசோதாவின் 49-வது விதியில் ஹோமியோபதி, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்கள் குறுகிய கால படிப்பிற்கு பின் அலோபதி மருத்துவ முறையை கையாள அனுமதிக்கிறது. இது மருத்துவ உலகில் போலிகளை உருவாக்கும். எனவே, இந்த மசோதா வாபஸ் பெறப்பட்டு நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட வேண்டும். இதில், மருத்துவர்கள் உட்பட சம்மந்தப்பட்ட அனைவரது கருத்துக்களும் ஏற்கப்பட வேண்டும்'' என மகேந்திரன் வலியுறுத்தினார்.

மகேந்திரன் பேச்சுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளிக்க மறுத்தார். அவரது முறை வரும்போது தன் கருத்தை மகேந்திரன் கூறலாம் எனவும் தெரிவித்தார். எனினும், தொடர்ந்து பேசிய மகேந்திரன் தன் கட்சியின் கருத்துகளை மக்களவையில் முன்வைத்து விட்டார்.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து