அமெரிக்க அதிபர் 'டிரம்ப் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: பாலஸ்தீனம் பதிலடி

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      உலகம்
trump 2017 10 12

ஜெருசலேம்: இஸ்ரேலுடனான அமைதி பேச்சுக்கு ஒப்புக்கொள்ளாத வரை பாலஸ்தீனத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த 1948-ல் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான் சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

எனினும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் தீர்மான நிறைவேற்றப்பட்டு இதற்கு 128 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்காவின் முடிவால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, இஸ்ரேலுடனான அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்தப்போவதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், பாலஸ்தீனத்தின் முடிவையடுத்து, அந்நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தப்போவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘பாலஸ்தீனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை வழங்கி வருகிறது. இதற்கு எந்த ஒரு பாராட்டோ அல்லது மரியாதையோ இல்லை. இஸ்ரேலுடன் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் தயாராக இல்லை. பேச்சுவார்த்தையில் கடுமையான நிலைப்பாட்டை பாலஸ்தீனம் எடுத்து வரும்போதிலும், அதற்காக அதிக விலை கொடுத்து வருகிறோம். ஆனால் பாலஸ்தீனம், அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விரும்பவில்லை. பிறகு ஏன் அந்நாட்டிற்கு இவ்வளவு பெரிய தொகையை எதிர்காலத்தில் வழங்க வேண்டும்?’’ என கூறியுள்ளார்.

பாலஸ்தீன அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக அந்நாட்டிற்கு அமெரிக்கா கடந்த 2016ம் ஆண்டில் சுமார் 4,000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுபோலவே, தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அந்நாட்டிற்கு வழங்கி வரும் ஒரு சில நிதியுதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்
இதனிடையே, நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரி ஹனான் அஷ்ராவி கூறுகையில் ‘‘அமைதிப்பேச்சுவார்த்தையை சீர்க்குலைக்கும் விதத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்பாடுகள் உள்ளன. இதனால் பாலஸ்தீனத்தின் சுதந்திரம், நீதி, அமைதி பாதிக்கப்படுகிறது. பாலஸ்தீனர்கள் மிரட்டலுக்கு ஆளாக மாட்டார்கள்’’ எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து