முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வடகொரியாவுடன் பேச தயார் தென்கொரியா அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

சியோல்: குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரிய அதிபர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் உயர்மட்ட அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தென்கொரியா அறிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, “அமெரிக்காவில் இருந்து வரும் எந்த மாதிரியான அச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறன் வடகொரியாவுக்கு உள்ளது. குறிப்பாக அணு ஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் எனது மேஜையில் தயாராக உள்ளது” என மிரட்டல் விடுத்தார்.

அதேநேரம், “தென்கொரியாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி 9 - 25) நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி வெற்றி பெறும் என நம்புகிறோம். இந்நிலையில் அந்த நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்புவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளோம்” என்றும் கூறினார். இதையடுத்து, ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தென்கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் சோ மயோங்-கியோன் நேற்று கூறும்போது, “வடகொரியாவுடன் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதன்படி, பன்முஞ்சோம் கிராமத்தில் உள்ள அமைதி இல்லத்தில் வரும் 9-ம் தேதி உயர்மட்ட அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அப்போது ஒலிம்பிக் போட்டி உட்பட இருதரப்பு உறவை மேம்படுத்த உதவும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தலாம்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து