கொள்கை இருக்கும் வரை யாரும் அ.தி.மு.க.விடம் நெருங்க முடியாது: பொன்னையன் பரபரப்பு பேட்டி

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      தமிழகம்
ponnaiyan 2016 12 04

சென்னை: எம்.ஜி.ஆர் வகுத்து கொடுத்த கொள்கைகள் இருக்கும் வரை தினகரனோ, ரஜினியோ யாரும் அ.தி.மு.கவை நெருங்க முடியாது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்து உள்ளார்.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உட்பட 12 பேருக்கு மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பேச அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்தவர்கள் நாங்கள் எங்களையும், ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தையும் தினகரனால் எதுவும் செய்ய முடியாது.
- பொன்னையன்

இந்நிலையில், செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னையனிடம்  சில கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அவைகள் வருமாறு:
 கேள்வி: அ.தி.மு.கவில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? எதற்காக இத்தனை மாற்றங்கள் ?
 பதில் : அ.தி.மு.க எப்போதும் போல மக்களோடு மக்களாக பயணித்து வருகிறது. சமீபகாலங்களில் சில வேண்டத்தகாத நிகழ்வுகள் மூலம் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியாலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தாலும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் அதிமுக தொண்டர்கள் வழி இயக்கம் தான் என்பதை ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் நிரூபித்து வருகிறது.


கேள்வி : டி.டி.வி தினகரன் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறாரே ?
 அவரை எப்படி சமாளிக்க போகிறீர்கள் ?
 பதில் : டி.டி.வி தினகரன் கொடுப்பது எல்லாம் குடைச்சலே அல்ல. அது அதிமுக வரலாறு அறிந்தவர்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள். ஏதோ கையில் இருந்த காசைக் கொண்டு ஆர்.கே நகரில் வெற்றி பெற்று விட்டார். அதற்காகத் தான் இந்த வெற்றுக்கூச்சல். உடனே தொண்டர்கள் அவர் பக்கம் இருப்பதை போல பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பக்கம் இருந்தவர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்தவர்கள் நாங்கள் எங்களையும், ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தையும் தினகரனால் எதுவும் செய்ய முடியாது.
 
 கேள்வி : ரஜினி தனிக்கட்சி தொடங்க இருப்பதால் அதிமுகவிற்கு பாதிப்பு இருக்கிறதா ?
 பதில் : ரஜினி இத்தனை ஆண்டு காலம் சொல்லிக்கொண்டு இருந்ததை இப்போது தான் செய்து இருக்கிறார் முதலில் அவருக்கு வாழ்த்துகள். அரசியலுக்கு வருவது அவரவருக்கு ஜனநாயகம் வழங்கி உள்ள உரிமை. ஆனால், கொள்கைகள் தான் அரசியலுக்கு முக்கியம். எம்.ஜி.ஆர் வகுத்துக்கொடுத்த அண்ணாயிச கொள்கைகள் அதிமுகவிடம் இருக்கும் வரை தினகரனோ, ரஜினியோ யார் வந்தாலும் இந்த கோட்டையை அசைக்க முடியாது என்று பொன்னையன் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து