முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா? கேப்டவுனில் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வெற்றிப்பெற்று முத்திரை பதிக்கும் என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கியுள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் சவாலானது என்பதில் சந்தேகம் இல்லை.

9 டெஸ்ட் தொடரை ...
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. இலங்கையை மட்டும் 3 தடவை (2-1, 3-0, 1-0) வென்றது. தென் ஆப்பிரிக்கா (3-0), வெஸ்ட்இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (3-0), வங்காள தேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக வென்றது. இந்த 9 தொடர் இந்திய மண்ணில் 6, வெளிநாட்டில் 3-யை (இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்) கொண்டது.

ரன் குவிப்பு இருக்கும்
கடந்த 10 தொடரில் விளையாடிய இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்த சாதனையை நீட்டித்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும். தவான் உடல் தகுதி பெற்றதால் தொடக்க வீரரை தேர்வு செய்வதில் சவால் இருக்கலாம். ஆனால் முரளிவிஜய், லோகேஷ், ராகுல் ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. 3-வது வீரர் வரிசையில் புஜாரா, 4-வது வீரர் வரிசையில் கேப்டன் விராட்கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். முதல் 4 வீரர்களின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும். தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு
ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்ட்யா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது வருகையால் ரோகித் சர்மாவின் இடம் கேள்விக் குறியே. பாண்ட்யாவுடன் ரகானே, விர்த்திமான் சகா ஆகியோரின் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பெறுவார்கள். ஜடேஜா உடல் தகுதியுடன் இல்லாததால் அஸ்வின் மட்டுமே சுழற்பந்தில் இடம் பெறுவார். 3 வேகப்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும். வேகப்பந்தில் புவனேஷ்குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் உள்ளனர். பாண்ட்யாவை வேகப்பந்து வீரராக கணக்கில் கொண்டால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பதிலடி கொடுக்கும் ...
தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் இந்தியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆர்வத்துடன் தென் ஆப்பிரிக்கா உள்ளது. மேலும் 2016-ம் ஆண்டில் இந்திய மண்ணில் தோற்றதற்கும் பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்கும் அந்த அணி சொந்த மண்ணில் அபாரமாக விளையாடக் கூடியது. பேட்டிங்கில் கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, எல்கர் ஆகியோரும் பந்து வீச்சில் பிலாண்டர், ரபடா, மார்னே மார்கல், கேசவ் மகாராஜ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஸ்டெயின் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது கடினமே.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய வீரர்கள் விவரம்
விராட்கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, விர்த்திமான் சகா, அஸ்வின், புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா, தவான், ரோகித் சர்மா, ஜடேஜா, பார்த்திவ் பட்டேல்.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள்
டுபெலிசிஸ் (கேப்டன்), எல்கர், மார்கிராம், டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, புவுமா, குயின்டன், டிகாக், பிலாண்டர், ரபடா, மார்னே மார்கல், கேசவ்மகராஜ், கிறிஸ்மோரிஸ், புருயின், ஸ்டெயின், பெலுகுவாயோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து