நெல்லை மாவட்டத்தில் தூய்மையான பள்ளிகளுக்கு விருதுகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தூய்மையான பள்ளிக்கூடங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

போட்டி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வருகிற பிப்ரவரி மாதம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் சுகாதார பராமரிப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் பள்ளிக்கூடங்களுக்கு விருதும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கு ‘‘சுத்தம் புத்தகம் தரும்’’ என்ற தலைப்பில் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையொட்டி வருகிற 22–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பள்ளிகள் கல்வித்துறை அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று மதிப்பீடு செய்வார்கள். அப்போது டெங்கு பாதிப்பு இல்லாத சூழல், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தல், தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு செயல்பாடுகள், கழிப்பறை பயன்பாடுகள், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு பராமரித்தல் ஆகிய அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் 21 ஒன்றியங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் தலா 1 பள்ளிக்கூடம் என ஒன்றியத்துக்கு 4 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படும். தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்ததாக ஒன்றியத்துக்கு 1 பள்ளிக்கூடம் தேர்வு செய்யப்படும். மொத்தமாக நெல்லை வட்டத்தில் 105 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படும்.தேர்வு செய்யப்படும் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம், நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம், உயர் நிலை பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், மேல் நிலை பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் தங்களது பள்ளிகளில் சுகாதாரம் பராமரிப்பு மற்றும் மேலாண்மையில் கவனம் செலுத்தி பரிசுகளை பெறலாம்.இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து