முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை புரட்டிப் போட்ட பாம் பனிப்புயல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 16 பேர் பலி

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகிழக்கு அமெரிக்காவை தாக்கிய பாம் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரால் வடக்கு கரோலினா, டெக்ஸாஸ், மிசவு, மிச்சிகன் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட கிழக்கு அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகளில் நிரம்பியுள்ள பனியால் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நியூ இங்கிலாந்து கடற்பகுதியில் பனிப்புயல் உருவானது. பாம் என்று பெயரிடப்பட்ட அந்த பனிப்புயல் நேற்று வடகிழக்கு அமெரிக்காவை தாக்கியது.

இந்தப் பனிப்புயலால் சுமார் ஏழு புள்ளி 8 அங்குலம் பனி மூடியுள்ளது. பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி பனிப்புயல், அண்மைக்காலங்களில் உருவான பனிப்புயல்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புயலால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாஸ்டனில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்ததால் அருகில் இருந்த சுரங்க ரயில் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஸ்டன் கடற்பகுதியில் 15.1 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பியுள்ளன. புயலால் கொட்டிய மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாஸ்டன் கடற்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என பாஸ்டன் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் மைனஸ் 35 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையால் வெள்ள நீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

24 இன்ச் உயரத்திற்கு பனிக்கட்டிகள் நிரம்பியுள்ளன. இதனால் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பலத்த காற்றும் வீசி வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குளிருக்கு 16 பேர் பலி
நியுஜெர்சியில் இருந்து வடக்கு கரோலினா வரை போடப்பட்ட தண்ணீர் குழாய்கள் உடைப்பெடுத்தன. கடுமையான குளிரால் வடக்கு கரோலினா, டெக்ஸாஸ், மிசவு, மிச்சிகன் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து