முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமராமத்து திட்டத்தால் மழை நீர் சேமிப்பு அதிகரிப்பு - தமிழக அரசுக்கு சட்டசபையில் கவர்னர் பாராட்டு

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 83 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது என்றும், பொது விநியோக திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார். குடிமராமத்து முறைக்கு புத்துயிர் ஊட்டியதால் அதிக அளவு மழை நீர் சேமிக்கப்படுகிறது என்றும் கவர்னர் தனது உரையில் பாராட்டியுள்ளார்.

அதிக நீரை சேமிக்க...

சட்டசபையில் நேற்று கவனர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாநிலத்தின் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து திறம்பட நீர் மேலாண்மை செய்வதற்காக, இந்த அரசு, ‘குடிமராமத்து’ முறைக்கு புத்துயிரூட்டி, அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து முறையைச் செயல்படுத்துவதிலும், ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதற்காக விவசாயிகள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியதிலும் முதல்வர் நேரடியாகக் கவனம் செலுத்தி எடுத்த முயற்சிகளால், இந்தப் பருவமழைக் காலத்தில் அதிகளவு நீரை நாம் சேமிக்க முடிந்தது.

மேலும் செறிவூட்டும் ...

வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன், மேலும் முனைப்புடன் செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. ஏரிகளைப் புனரமைப்பதற்காகவும், நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும் உலக வங்கி நிதியுதவியுடன் ‘தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தை’ இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. காவேரி டெல்டாவில் வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இந்த அரசு செயல்படுத்தி வரும் ‘பருவநிலை மாற்றத் தழுவல் திட்டம்’ மாநிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேலும் செறிவூட்டும்.

மக்கள் நல அரசாக...

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னுதாரணமான மக்கள் நல அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருவதன் மூலம், இந்த அத்தியாவசியப் பொருட்களின் சந்தை விலையில் ஏற்படும் விலை ஏற்றத்திலிருந்து ஏழை மக்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது.

ஸ்மார்ட் அட்டைகள் ...

கடந்த ஆண்டைப் போன்றே, இவ்வாண்டும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இதரப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், சேவைகள் மற்றும் பொருள் விநியோகம் வெளிப்படையாகவும், தங்குதடையின்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்த இந்த அரசு பெருமுயற்சி செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து குடும்ப அட்டைகளுடனும் ஆதார் எண்ணை இணைக்கும் இந்த அரசின் முயற்சி அனைத்துத் தரப்பு மக்களாலும் வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒரு கோடியே 94 லட்சம் குடும்பங்களில், இதுவரை ஒரு கோடியே 88 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து