தமிழக சட்டசபை வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது - சபாநாயகர் தனபால் அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      தமிழகம்
Dhanapal(N)

சென்னை : தமிழக சட்டசபையில் இன்று முதல் 12-ம் தேதி வரை கவர்னர் அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

கவர்னர் உரை ...

தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதன்முதலாக தனது உரையை வாசித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 12.42 மணிக்கு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டபேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீண்டும் கூடுகிறது


தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 17 உறுப்பினர்களில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தவிர மற்றவர்கள் பங்கேற்றனர். நாளை (இன்று) காலை 10 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகின்றன. இதையடுத்து ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதன்பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் மேற்கொள்ளப்படுகிறது.

துணை நிதிநிலை...

10 மற்றும் 11 தேதிகளிலும் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்று எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். 12-ம் தேதி 2017-18-ம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கிறார். இதன் பின்னர் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.

காலை 10 மணிக்கு...

இதைத்தொடர்ந்து மானியக்கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்து ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டது. இவை தவிர தி.மு.க வைத்துள்ள மற்ற கோரிக்கைகள் பரீசிலனை செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். தினமும் காலை 10 மணிக்கு சட்டபேரவை கூடும் என்றும் சட்டபேரவை கூடும் நாட்களில் கேள்வி - பதில் நேரமும் உண்டு என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து