தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தமிழகம்
tamilnadu busstrike 2018 1 6

தஞ்சை,  தஞ்சாவூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம்  நேற்றும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இருந்தும் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நீதிமன்றம் தலையிட்டு போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தற்காலிக பேருந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் பேருந்துகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக, கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த கண்டக்டர்களாக பணிபுரியும் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தை சேர்ந்த மதிவாணன், கஸ்தூரி, தாமரை செல்வன், தொ.மு.ச., சங்கத்தை சேர்ந்த ஜெயவேல்; டிரைவர்களாக பணிபுரியும் தொ.மு.ச சங்கத்தை சேர்ந்த அண்ணாமலை, ஜெகதீசன் உள்ளிட்ட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கும்பகோண கோட்ட மேலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து