வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை ஏற்பட அதிபர் டிரம்ப் உதவினார்: தென் கொரியா அதிபர் பேட்டி

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      உலகம்
South Korea President 2018 01 11

சியோல், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை ஏற்பட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருதும் உதவியதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்க உள்ளது என்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் தெரிவித்தன.

ஐ.நா.வின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. வடகொரியா, அமெரிக்கா இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது.


இந்நிலையில், தென் கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாடும் பங்கேற்க விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த புத்தாண்டு தினத்தில் அறிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர் அதிகாரிகளை அனுப்ப தயார் என்றும் தெரிவித்தார். இதற்கு தென்கொரியாவும் சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து, இருநாட்டு எல்லையில் தென்கொரிய பகுதியில் உள்ள அமைதி கிராமமான பன்முஞ்சோமில் இருநாட்டு பிரதிநிதிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் சோ மியோங்-கியோன், வடகொரியாவின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ரி சன் க்வான் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

இதன் முடிவில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி வைக்க வடகொரியா ஒப்புக் கொண்டது. அவர்களுடன் உயர்நிலை அதிகாரிகள் குழு, ஆதரவாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோரையும் அனுப்பி வைப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை குறித்து தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை ஏற்பட  அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிதும் உதவினார். இந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு என் நன்றியினை கூற விரும்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து