ஆதார் ரகசியங்களை காக்க 16 இலக்க எண் புதிய நடைமுறை அறிமுகம்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      இந்தியா
Aadhaar card(N)

புது டெல்லி : ஆதார் விவகாரத்தில் தனி நபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு தீர்வு காண்பதற்காக புதிய நடைமுறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, வரும் நாள்களில் புதிய சிம் கார்டு, வங்கிக் கணக்குத் தொடக்கம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணைத் தெரிவித்தால் போதுமானது. அந்த எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்தின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலம் வரை அந்த மெய்நிகர் எண்ணானது செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு புதிதாக மற்றொரு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். கடவுச்சொல் (பாஸ்வேர்டு) போல ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த எண்ணை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கையின் மூலம் ஆதார் விவரங்களை எவரும் சுலபமாகக் கையாள முடியாது என்றும் தனிநபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 119 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, வங்கிக் கணக்கு, நிரந்தரக் கணக்கு எண் (பான்), செல்லிடப்பேசி என அனைத்து சேவைகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தனிநபர் உரிமைகளுக்கு முரணான நடவடிக்கை என பலர் விமர்சித்ததுடன் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்தனர்.

இது ஒருபுறமிருக்க, ஆதாருக்காக மக்களின் கை ரேகை, கருவிழிப் படலம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்கும் பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன. இதனால், தனிநபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரது ஆதார் விவரங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. இதைத் தவிர, புதிதாக அரசு மானியங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியது விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில், இந்த விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் எண்ணைத் தெரிவிப்பதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் எண்ணைத் தெரிவிக்கும் அந்த நடைமுறையை அனைத்துத் தரப்பினரும் வரும் ஜூன் மாதம் முதல் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்தத் தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள ஆணைய இணையதளப் பக்கத்துக்குச் சென்று மெய்நிகர் எண்ணை ஒருவர் உருவாக்கிக் கொள்ளும்போது, அந்த எண் சம்பந்தப்பட்டவரின் ஆதார் விவரங்களோடு இணைக்கப்பட்டுவிடும். அதன் மூலம் அவரது சுய விவரங்கள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து