லல்லுவின் கால்நடைத் தீவன ஊழல் - 3-ஆவது வழக்கில் வரும் 24-ல் தீர்ப்பு

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      இந்தியா
lalu-prasad 2017 05 16

ராஞ்சி : கால்நடைத் தீவன ஊழல் விவகாரத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான 3-ஆவது வழக்கில், ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

பீகார் மாநில முதல்வராக லல்லு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைத் தீவனம் கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லல்லு உள்ளிட்டோருக்கு எதிராக 5 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்தது. இதில், ரூ.37.7 கோடி கையாடல் செய்ததாக தொடுக்கப்பட்ட முதல் வழக்கில் லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலுள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-இல் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, தியோகர் அரசு கருவூலத்தில் ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடுக்கப்பட்ட 2-ஆவது வழக்கில், லல்லுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது முதல் ராஞ்சியிலுள்ள மத்திய சிறையில் லல்லு அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், சாய்பாசா அரசு கருவூலத்தில் ரூ.35.62 கோடி கையாடல் செய்தது தொடர்பான 3-ஆவது வழக்கில் லல்லு உள்ளிட்டோரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில் வரும் 24-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என சிறப்பு நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் அறிவித்துள்ளதாக சி.பி.ஐ அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

இந்த வழக்குகள் தவிர, தும்கா அரசு கருவூலத்தில் ரூ.3.97 கோடி கையாடல் செய்தது, டோரண்டா கருவூலத்தில் ரூ.184 கோடி கையாடல் செய்தது என மேலும் இரு வழக்குகள் லாலுவுக்கு எதிராக நிலுவையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து