பஸ் ஊழியர் பிரச்சினைக்கு சமரச தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம் - ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப ஐகோர்ட் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      தமிழகம்
tamilnadu busstrike 2018 1 6

சென்னை : பஸ் ஊழியர் பிரச்சினை தொடர்பாக சமரச தீர்வுகாண போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் தமிழக அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மீண்டும் விசாரணை

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான வழக்குநேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்த நடுவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து விசாரணை நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கியபோது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


வழங்க முடியாது

போக்குவரத்து துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும், மத்தியஸ்தம் செய்ய நடுவர் நியமிக்க சம்மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சங்கங்கள் கூறும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திற்கு சம்பளம் வழங்க முடியாது. வேலைநிறுத்தத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக தாக்கலான வழக்குகளும் வாபஸ் பெறப்படமாட்டாது’ என்றும் அரசு கூறியுள்ளது. இதையடுத்து, தற்போதைய நிலையில் தொழிற்சங்கங்களின் நிலை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

குற்றம் சுமத்த வேண்டாம்

இதையடுத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்களிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, நீதிமன்றத்துக்கு ஆண்டுதோறும் மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் வருகின்றன. இதுவரை மோட்டார் வாகன வழக்குகளில் மட்டும் ரூ.750 கோடி அளவுக்கு தமிழக அரசால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் விபத்துகளுக்கு உங்கள் ஓட்டுநர்கள்தானே காரணம்? என்று கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தரை நியமிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று இனி அரசு மீது குற்றம் சுமத்த வேண்டாம். சமரசத்துக்குத் தயார் என்று இன்று (நேற்று) கூட பதில் மனுவில், கூறிவிட்டது. எனவே இதனை இடைக்கால தீர்வாக ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். முதலில் ஊதிய உயர்வு மட்டுமே தேவை என மனுவில் கோரியிருந்தீர்கள். தற்போது குற்ற வழக்கில் இருந்து விடுதலை, விடுமுறைக் கால ஊதியம் என பல நிபந்தனைகளை முன் வைக்கிறீர்களே? என நீதிபதிகள் கேட்டனர்.

நீதிபதிகள் வலியுறுத்தல்

மேலும், அரசைக் கண்டிக்கும் துணிவு நீதிமன்றத்துக்கு இல்லை என தொமுச நிர்வாகி பேசியுள்ளதாக அரசு வழக்குரைஞர் கூறினார். இது குறித்துக் கருத்துக் கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு துணிவு இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். தொழிற்சங்க நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். சமரசப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஏற்பதும் மறுப்பதும் தொழிற்சங்கங்களின் விருப்பம். மறுத்தால் நீதிமன்றமே வழக்கை நடத்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மத்தியஸ்தர் நியமனம்

இதனையடுத்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார். இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும், எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து