முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் முதன்மை செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுப்பு

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பிரதமரின் முதன்மை செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அவர் வீட்டிற்கு சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால் தீபக் மிஸ்ரா அவரை சந்திக்க மறுப்பு தெரிவிக்கவே வீட்டு வாசலில் காத்திருந்து விட்டு கேட்டில் புத்தாண்டு வாழ்த்து அட்டையை வைத்து விட்டு திரும்பியுள்ளார் நிர்பேந்திரா மிஸ்ரா. உச்சநீதிமன்ற செயல்பாடுகள் எதுவும் சரிவர இல்லை, வழக்குகள் சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கப்படாமல் ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன் ஜோசப்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்தத் தகவல்களைச் சொன்னதோடு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலேயே தற்போது இதனை சொல்வதாகவும், தலைமை நீதிபதியை மாற்றுவது குறித்து நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா மீதான இந்த குற்றச்சாட்டு நீதித்துறையில் இருக்கும் குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியதாகவே முன்னாள் நீதிபதிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.

நீதித்துறையின் மீது வெளிப்படையாக வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு, குறித்து பிரதமர் நரேந்திர மோடி சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் உடனடியாக நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் நீதித்துறையின் பிரச்னையில் அரசு தலையிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நீதிபதிகளின் பிரச்னையில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்பதால் அவர்களே பேசி தீர்வு காணட்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் கவனிக்கப்பட வேண்டியவை என்று காங்கிரஸ் கட்சி கருத்து கூறி இருந்தது.

இந்நிலையில் பிரதமரின் முதன்மை செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அவரது இல்லத்தில் சந்திக்க முயற்சித்துள்ளார். ஆனால் தீபக் மிஸ்ரா அனுமதி மறுக்கவே காரிலேயே காத்திருந்து விட்டு பின்னர் தனது அலுவலகம் திரும்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள நிர்பேந்திரா, "என்னுடைய அலுவலகம் செல்லும் வழியில் தலைமை நீதிபதி வீட்டின் கேட் முன்னர் புத்தாண்டு வாழ்த்துக்கான அட்டையை வைத்து விட்டு வந்தேன், அவரை சந்திக்க வில்லை" என்று கூறியுள்ளார்.

முதன்மை செயலாளர் பிரதமரின் சிறப்பு மெசெஞ்சராக தலைமை நீதிபதியை சந்திக்கச் சென்றது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்தக் கட்சியின் ரன்தீப் சர்ஜ்வாலா இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், பிரதமரின் செயலாளர் நிர்பேந்திரா தலைமை நீதிபதியை சந்திக்க முயற்சித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து