11-வது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது : ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க 1122 வீரர்கள் கையொப்பம்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      விளையாட்டு
Joe Root 2018 1 13

பெங்களூரு : ஐ.பி.எல்.லின் 11-வது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இதற்கான ஏலத்தில் பங்கேற்பதற்காக 1122 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் முதல் முறையாக ஏலத்தில் கலந்துகொள்கிறார்.

11-வது சீசன்...

ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது. இதுவரை 10 சீசன் போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறுகிறது.


1122 வீரர்கள்...

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள்  தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று ஐ.பி.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏலத்தில் பங்கேற்க 1122 வீரர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

281 நட்சத்திர ....

281 நட்சத்திர வீரர்கள், 838 பிரபலமல்லாத வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்துள்ளனர். உலகம் முழுதிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் இதில் பங்கேற்றாலும் இந்தியாவின் மிகவும் பிரபலமான வீரர்கள் இந்த சீசனில் முக்கியத்துவம் பெறுவார்கள்.

அதிக எதிர்பார்ப்பு....

இந்தியாவின் யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், அஷ்வின், ரகானே போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், முரளி விஜய், ஆப் ஸ்பின்ர் ஹர்பஜன் சிங் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஜோ ரூட் பங்கேற்பு

சர்வதேச வீரர்களைப் பொருத்தவரை கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ் முன்னணியில் உள்ளனர். பெங்களூரு அணியில் விளையாடிய கெயில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. எனவே, அவர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்கிறார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கிறார்.

282 வீரர்கள் ...

வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 282 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 57 பேரும், வெஸ்ட் இண்டீஸ், இலங்கையில் இருந்து  தலா 39 பேரும், நியூசிலாந்தில் இருந்து 30 பேரும், இங்கிலாந்தில் இருந்து 26 பேரும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இருந்து 2 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து ஒரு வீரரும் வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து