முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா பிரச்சினைக்கு தீர்வு காண 20 நாடுகள் கூடி ஆலோசனை

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வான்கூவர், வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வான்கூவர் குழுவைச் சேர்ந்த சுமார் 20 நாடுகள் அமைப்பு கூடி ஆலோசனை நடத்தின.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்திருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா வடகொரியா அதிபர்களுக்கிடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது.

கடந்த புத்தாண்டில் உரை நிகழ்த்திய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் தனது மேஜையில் தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்தார். இதையடுத்து, வடகொரியாவிடம் இருப்பதைவிட பெரிய அணு ஆயுத பொத்தான் தங்களிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் பதிலடி கொடுத்தார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா ஒப்புக்கொண்டது. வடகொரிய மற்றும் தென்கொரிய உயர் அதிகாரிகள் 2 ஆண்டு களுக்குப் பிறகு கூடி நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில், வான்கூவர் குழு நாடுகளின் கூட்டம் கனடா வில் உள்ள வான்கூவர் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கனடாவும் அமெரிக்காவும் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில், வடகொரியாவின் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையை ராஜதந்திர ரீதியாக தடுத்து நிறுத்துவது, அந்த நாட்டின் மீதான பொருளாதார தடையால் ஏற்பட்டுள்ள விளைவுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும், வான்கூவர் குழுவில் இடம்பெற்றுள்ள சீனாவும் ரஷ்யாவும் (வடகொரியாவின் நட்பு நாடுகள்) இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை செயல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து