முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் - டெல்லி கூட்டத்தில் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் நடைபெற்ற பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை இறுதி செய்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நேற்று மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது, 

தமிழக அரசு பரிந்துரை

ஜி.எஸ்.டி விவகாரம் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கே தெரிவித்து கொள்கிறேன். ஆனாலும் மாநிலங்களின் நிதி திறனை பாதிக்கத்தான் செய்கிறது. எனவே பணி ஒப்பந்தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் படி மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட வேண்டியது அவசியம். இதற்காக தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தோம். கடந்த 2015ம் ஆண்டு மத்திய உயர்மட்ட குழு ஒன்று இதற்காக சென்னைக்கு வந்து இடங்களை பார்வையிட்டது. மத்திய அரசுக்கு அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அறிவிக்க வேண்டும்

ஆனால் இறுதி முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளது. மத்திய சுகாதார துறை காலதாமதம் செய்து வருகிறது. இந்த தாமதம் ஏன் என்று கேட்க விரும்புகிறேன். இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுகிற இடத்தை இறுதி செய்து இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். தமிழக அரசு ரூ. 5255 கோடி நிதியுதவியை மத்திய அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தது. பல்வேறு நிதி தேவைகளை சமாளிக்க மத்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்திற்கு சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டியதுள்ளது. கோயம்பேடு, பூந்தமல்லி, வாலாஜாபேட்டை ஆறடுக்கு சாலை ரூ. 1500 கோடியில் அமைக்கப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ. 2300 கோடி செலவில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு விஷன் 2023 திட்டத்தின் படி முன்னாள் முதல்வர் அம்மா தமிழகத்தில் 10 பெரிய ரயில் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தினார். அவற்றை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து