முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். அனிமேஷனில் நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ ’ படம் தொடக்க விழா

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided

எம்.ஜி.ஆர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை தயாரித்து நடிக்க திட்டமிட்டார். இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அந்த படம் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் தயாராகிறது.இதில் கதாநாயகனாக நடிக்கும் எம்.ஜி.ஆர் தோற்றம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தை வேல்ஸ் பல்கலை கழக வேந்தரும் மறைந்த நடிகர் ஐசரிவேலனின் மகனுமான ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி எம்.அருள்மூர்த்தி டைரக்டு செய்கிறார்.இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அடையாறு பழைய சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கமல்ஹாசன் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். இருவருக்கும் ஐசரி கணேஷ் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.படத்தில் முன்னாள் கதாநாயகி லதா நடித்த காட்சியை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து ‘கிளாப்’ அடித்தும் கேமராவை இயக்கியும் படமாக்கியபோது கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பின்னர் மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்த சில காட்சிகள் திரையிடப்பட்டன. அதை ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் 10 நிமிடங்கள் நின்று கொண்டே பார்த்து ரசித்தார்கள்.விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, சச்சு, காஞ்சனா, சத்யபிரியா, ராஜஸ்ரீ, அம்பிகா, ரோஜாரமணி, சங்கீதா, ஷீலா, ஜெயமாலினி, சி.ஐ.டி.சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள். அவர்களுக்கு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்கள்.

மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வி.ஐ.டி.பல்கலை கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், நடிகர் கே.ராஜன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த அனைவரையும் ஐசரி கணேஷ் வரவேற்றார். அவர் கூறும்போது, “எம்.ஜி.ஆர் அனிமேஷனில் நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ அதிக பொருட் செலவில் பிரமாண்ட படமாக தயாராகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் பட நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளான 17-1-2019 அன்று உலகம் முழுவதும் இந்த படம் திரையிடப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து