முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் : ஜெயப்ரதா

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided

“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

முழுக்க முழுக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
ஜெயப்ரதா பேசும் போது, “எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது.

ஏனென்றால் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழைஜாதி, தசாவதாரம் இப்போது கேணி என தமிழில் நல்ல படங்களில் நடித்திருக்கிறேன். மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன், அதனை நிறைவேற்றிய சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் இருவருக்கும் என் நன்றிகள். இந்த கேணி படத்தில் நான் நடித்திருக்கும் “இந்திரா” என்கிற கேரக்டர், என் மனதிற்கு மிக நெருக்கமாக மாறிப்போயிருக்கிறது. எல்லோரும் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம்,

ஆனால் இந்த சமூகத்தை பெண்கள் தான் வழிநடத்த வேண்டும் என “கேணி” பேசியிருக்கிறது. தண்ணீர் என்பது தமிழ்நாடு சம்பந்தப்பட்டதோ, கர்நாடகா, கேரளா சம்பந்தப்பட்டதோ கிடையாது அது உலகளாவிய பிரச்சினை. அப்படி ஒரு உலகளாவிய பிரச்சினையை கதையாக்கி, அதில் என்னையும் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் நிஷாத்திற்கு நன்றிகள். இன்னும் குறிப்பாக “கேணி” படத்திற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஏசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி அவர்களும் இணைந்து பாடியிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை.

இந்தப் படத்தில் என்னோடு நடித்த அத்தனை பேருக்கும், பணியாற்றிய கலைஞர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.” என்று பேசினார்.விழாவின் முடிவில் சுஹாசினி மணிரத்னம் இசைத் தட்டை வெளியிட ஜெயப்ரதா, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து