முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பஸ் கட்டணம் குறைவு :நிதி நெருக்கடியை சமாளிக்கவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது - மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அரசு வேண்டுகோள்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

கரூர் : நிதி நெருக்கடியை சமாளிக்கவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்றும், மற்ற மாநிலங்களை காட்டிலும் இந்த கட்டண உயர்வு குறைவுதான் என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ் கட்டண உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசு நேற்று முன்தினம் பஸ் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண மாற்றங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்தன. பஸ் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

தினமும் ரூ.10 கோடி...

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் புதிய பேருந்துகளும் வாங்கப்படவில்லை. இதனால் தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பை அரசு போக்குவரத்து கழகம் சந்தித்தன. பஸ்களுக்கான எரிபொருள் விலை அதிகரிப்பு, கூடுதல் பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால்  பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் மக்கள் நலன் கருதி கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சில நாட்களாக அரசு உயரதிகாரிகள் பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கட்டணத்தை உயர்த்தி நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடும் நிதிநெருக்கடி...

இந்த நிலையில் கரூர் மாவட்டம் புஞ்சை புகழூரில் ரூ.75 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்த கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும்,  போக்குவரத்துத்துறை அமைச்சருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பேரூந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. போக்குவரத்துத்துறைக்கு கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வுக்கு பின்பு ரூ.12 கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி சுமையிலும் கடந்த 2011-ம் ஆண்டு பிறகு அதாவது 7 ஆண்டுகள் கழித்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்வு என ரூ.4657 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 60,000 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.2500 கோடியை முழுமையாக வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் குறைவு...

இதுவரை இல்லாத அளவிற்கு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட்டுகிறது. ஆந்திராவில் கி.மீட்டருக்கு 63.70 காசும், கேரளாவில் 64 காசும் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பலமுறை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 16 முறையும், ஆந்திராவில் 8 முறையில் கேரளாவில் 8 முறையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.900 கோடி பற்றாகுறை

தமிழக மக்களின் நலன் கருதி தமிழகத்தில் மிக குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற பகுதிகளில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்யும் நிலையிலும் சேவை அடிப்படையில் அதிக அளவில் பேருந்துள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு ரூபாய் வரவு என்றால் ஒரு ரூபாய் 45 பைசா செலவு உள்ளது. இதனை சரிசெய்யவே இந்த ஆண்டு கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு பின்பு ஆண்டிற்கு ரூ.900 கோடி பற்றாகுறை ஏற்படும். இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் அதிக கட்டணம் வசூலிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் பொறுத்துக்கொள்ள...

வரும் காலங்களில் போக்குவரத்துத்துறை நவீனமயமாக்கப்படும். விரைவில் 2000 பேருந்துகள் இயக்கப்படும். நவீன வசதிகளுடன் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிக்கு வர உள்ளது. எனவே இந்த பேருந்து கட்டண உயர்வை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசிற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டுமென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வரவு குறைவு - செலவு அதிகம்

தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டது. ஊதிய உயர்வுக்கு பின்பு தற்போது ரூ.12 கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு ரூபாய் வரவு என்றால் ஒரு ரூபாய் 45 பைசா செலவு உள்ளது. கட்டண உயர்வுக்கு பின்பு ஆண்டிற்கு ரூ.900 கோடி அரசுக்கு பற்றாகுறை ஏற்படும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து