முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய சட்டம்: முதல்வரை சந்தித்து தொழிலதிபர்கள் பாராட்டு

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட ஒற்றை சாளர கலந்தாய்வு சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொழில் அதிபர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி.பழனிசாமியை நேற்று தமிழ்நாடு மாநில தொழில் கூட்டமைப்பு கவுன்சில் துணைத்தலைவர் பொன்னுசாமி, தலைவர் ரவிச்சந்திரன், தென்மண்டல தொழில் கூட்டமைப்பு துணைத்தவலைவர் தினேஷ், தென் மண்டல இயக்குனர் சதீஷ்ராமன், அசோக் லேலண்டு மேலாண் இயக்குனர் வினோத் கே.தாசரி, மூத்த துணைத்தலைவர் பி.ஜி.சந்திரமோகன், கெவின்கேர் தலைமை மேலாண் இயக்குனர் ரங்கநாதன், எம்.ஆர்.எப். டயர்ஸ் தலைமை மேலாண் இயக்குனர் கே.எம்.மாமூன் ஆகியோர் சந்தித்து பேசினர். இதன் பின்னர் நிருபர்களுக்கு தொழில் நிறுவனத்தினர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

முதல்வருடன் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் பெரிய சந்தோஷம் என்னவென்றால், 2 மாதத்திற்குமுன் தமிழக அரசு சிறப்பு தொழில் சட்டம் 2017 கொண்டு வந்தார். அதில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் விண்ணப்பித்தால் 29 நாட்களில் அனுமதி பெறலாம் என்று தொழில்துறையினர் முதலீட்டை ஈர்ப்பதற்காக திட்டம் கொண்டு வந்தார். அதில் மூன்று பேருக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இன்னும் 15 பேர் விண்ணப்பித்திருக்கின்றார்கள். இன்றைக்கு நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பொழுது முன்னர் உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பொழுதோ அல்லது ஒரு மாறுதல் செய்யும் பொழுதோ எங்களுக்குத் தேவையான ஒப்புதல் செய்வதை கலந்தாய்வு முறையில் தான் வரவேண்டும் என்று கூறினோம். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதனையும் சேர்த்துவிடலாம் என்று தெரிவித்தார்.

முக்கியமான மாற்றம்

இது மிகப்பெரிய விஷயம். பொதுவாக, ஒப்புதலுக்கு க்கு செல்லும்பொழுது சி.எம்.டி.ஏ. டி.டி. சி.பி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகின்றது என்று கூறியதற்கு இவற்றையும் அதிலேயே சேர்த்துவிடலாம் என்று கூறினார்கள். தொழில்துறையினர் பக்கத்து மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்பதற்கு இது ஒரு தூண்டுதல். டி.வி.எஸ்., எம்.ஆர்.எப், அசோக்லேலண்டு என்று எல்லோரும் சந்தித்தார்கள். இதுபோல் தொழில்துறையினர் வந்து சந்தித்ததால் அனைவருக்கு்ம மகிழ்ச்சி. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம். இது முக்கியமான மாற்றம் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நிருபா்கள் கேட்ட கேள்விகளுக்கு, தொழில்துறையினர் அளித்த பதில்கள்,

கேள்வி: உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து நீங்கள் ஏதும் பேசினீர்களா?

பதில்: அதைப்பற்றி பேசவில்லை. அதை அரசாங்கம் முடிவு செய்து எப்பொழுது என்று அறிவிப்பார்கள். இதில் இரண்டு விஷயம் என்னவென்றால், நாம் தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பை எப்படி மேம்படுத்த முடியும் அதே சிறு குறு தொழிலுக்கு எப்படி ஆதரவளித்து வளர்ச்சி அடைய உதவ முடியு்ம என்பது குறித்து பேசினோம்.

கேள்வி: தமிழ்நாடு அரசு சிறப்பு தொழில் சட்டம் 2017 என்ற சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. செய்திருக்கின்றார்கள். இந்த சட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு எப்படி உதவிகரமாக இருக்கும்?

பதில்: இந்த சட்டம் மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.  இப்படியொரு சிறப்பு பிரிவு அகில இந்திய அளவில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இது நிறைய பேருக்கு தெரியாது. பழைய மாதிரி இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். இது கண்டிப்பாக உதவி அளிக்கும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகள் வருவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. தொழில்கள் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு 29 நாளில் ஒப்புதல் கிடைத்துவிடும். அதுமாதிரி ஒரு விஷயம் சுலபமாக செய்ய முடியாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வளவு துரிதமாகவும்,வெற்றிகரமாகவும் செய்கின்றார்கள்.

கேள்வி: தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலத்திற்கு போய்விட்டது என்றுபரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

பதில்: இப்பொழுது ஒரு சாதகமான சூழல் இருக்கிறது. சென்ற தொழில்முதலீடுகள் எல்லாம்வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், இப்பொழுது நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 45 நிமிடங்கள் பார்த்துப் பேசினோம். எங்களிடம் அவர் ஆலோசனை கேட்கிறார். இந்தமாதிரி உட்கார்ந்து பேசுவதற்கு இவ்வளவு பெரிய வாய்ப்பே கிடைக்காது. அதுவே பெரிய விஷயம். எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நாங்கள் நேரம் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதெல்லாம் பெரிய விஷயம். எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்த்தால் எங்கள்குறைகளைச் சொல்லலாம். இது பெரிய வாய்ப்பு.

கேள்வி: கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது, இந்த முறை அதுபோல் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா?

பதில்: இப்பொழுது சூழ்நிலை மாறியிருக்கிறது. இந்த முறை கண்டிப்பாக முதலீடுகள் வரும். இங்கு இருக்கின்ற தொழில்களை தமிழ்நாட்டில் இருக்கின்ற எந்த தொழிலாக இருந்தாலும் இங்குதான் விரிவாக்கம் செய்கிறார்கள். நம் மாநிலத்திலிருந்து யாருமே வெளியில் போகவில்லை. எனவே, இது நம் மாநிலத்திற்கு ஒரு பெரிய வலிமை. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து