முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் தற்காலிக செலவினங்களுக்கு நிதியளிக்கும் மசோதா: செனட் சபை ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: அமெரிக்காவில் தற்காலிகமாக செலவினங்களுக்கு நிதியளிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அங்கு கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த முடக்கம் சீரடையத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த

நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான (அக்டோபர் முதல் செப்டம்பர்) பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை. அமெரிக்காவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என, ஜனநாயகக் கட்சியினர் கோரி வருகின்றனர்.

ஆனால், அதற்கு ஆளும் கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர மறுத்தனர்.
ஏற்கெனவே 3 முறை குறுகிய கால செலவின மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், 4-வது முறையாக குறுகிய கால செலவின மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பிரதிநிதிகள் அவை ஒப்புதல் வழங்கியபோதிலும் செனட் அவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதனால் கடந்த 20-ம் தேதி முதல் அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது. பெரும்பாலான துறைகள் மூடப்பட்டுள்ள. எனினும் அத்தியாவசிய தேவைகளான ராணுவம், போலீஸ், அஞ்சல் சேவை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைகள், வரிவிதிப்பு, மின் உற்பத்தி ஆகிய துறைகள் மட்டுமே இயங்கின. அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டது. இடைக்கால ஏற்பாடாக, தற்காலிக செலவினங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 81 பேரும் எதிராக 18 பேரும் வாக்களித்திருந்தனர்.

பிரதிநிதிகள் அவையில் 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றிருந்தது. மசோதா அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்த இடைக்கால செலவின மசோதா பிப்ரவரி 8-ம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது. நீண்ட செலவின மசோதாவுக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து