முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் ரெயில்நிலையத்தில் உயரம்குறைவான நடைமேடையால் பயணிகள் அவதி

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

மண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில்நிலையத்தில் உயரம் குறைவான நடைமேடையால் பயணிகள் சொல்ல முடியாத அவதிஅடைந்து வருகின்றனர்.
     ராமநாதபுரம் மாவட்டத்தில் அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம் மற்றும் இந்துக்களின் புண்ணியதலங்களான திருப்புல்லாணி, தேவிபட்டிணம், உத்தரகோசமங்கை உள்ளிட்ட தலங்களுக்கும், முஸ்லீம்களின் புண்ணிய தலமான ஏர்வாடிக்கும் நாள்தோறும் பல்வேறு பக்தர்களும், வெளிநாட்டு, வடநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ராமேசுவரம்-மதுரை இடையே அகலரெயில்பாதை அமைக்கப்பட்டு பலவருடங்களாகிறது. இந்த திட்டம் முடிவடைந்த பின்னர் ரெயில்கள் அதிகளவில் விடப்படும் என்றும், பல்வேறு தொடர் வளர்ச்சி பணிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அகல ரெயில்பாதை திட்டத்திற்கு பின்னர் ஏற்கனவே சென்றுவந்த ரெயில்கள் கூட விடப்படாமல் குறைக்கப்பட்டு தற்போது ஒரு சில ரெயில்களே விடப்பட்டு வருகின்றன. ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாதது ஒருபுறமிருக்க ரெயில்நிலையங்களில் வளர்ச்சி பணிகள் சிறிதளவு கூட செய்யப்படவில்லை. அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டபோது கூட சில பணிகளில் அக்கறை காட்டப்படாததால் ரெயில்நிலையங்கள் அரைகுறையாகவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில்நிலையத்தில் பயணிகள் நடைமேடை உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.
     அகலரெயில்பாதையில் வந்துசெல்லும்ரெயில்களின் உயரத்தை கணக்கில்கொள்ளாமல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு வந்து செல்லும் பயணிகள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர். பொதுவாக ரெயில்நிலையங்களில் ரெயில்கள் வந்து நின்றதும் அதன் படிகளில் நேரடியாக ஏறிச்செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், மண்டபம் ரெயில்நிலையத்தில் நடைமேடை உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளதால் ரெயில்களின் கீழ்உள்ள 3 படிகளின் மீது ஏறி அதன்பின்னர் மேலபடியில் ஏறி உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதி திறந்தவெளியாக உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் படியில் ஏறவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களான வயதானவர்கள் மண்டபம் ரெயில்நிலையத்தில் ரெயில் ஏறுவது என்பது உயிர்போய் உயிர்வரும் நிலையாகவே உள்ளது. ரெயில்கள் நிற்கும் சில நிமிடங்களில் இந்த படிகளில் அச்ச உணர்வுடன் ஏறி செல்வதற்குள் ரெயில்கள் சென்றுவிடும் நிலை உள்ளதால் பயணிகள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர். எனவே,இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பயணிகள் நடைமேடையை ரெயில்களின் உயரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து